தமிழினி:ஈழப்போரின் சாட்சியாகவும் மனச்சாட்சியாகவும்…அ.ராமசாமி

tamilini 1இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களின் எந்த எழுத்தையும் உடனடியாக வாசிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை நான் உருவாக்கிக்கொண்டதில்லை. ஆவலுடன் காத்திருந்து வந்தவுடன் வாசித்த இளம்பிராயத்து ஆவலைக் கடந்தாகிவிட்டது. இப்போது அச்சில் வரும் எழுத்துகளை வரிசைகட்டி நிறுத்தி வாசிக்கும் நிதானம். ஆனால் தமிழினியின் ஒருகூர்வாளின் நிழலில் அந்த வரிசையைத் தள்ளிவிட்டு முன்வந்து வாசிக்கும் நெருக்கடியைக் கொடுத்த பிரதியென்பதைச் சொல்லியாகவேண்டும்.எனக்கும் தமிழினிக்குமான உறவுதான் இந்த வரிசையுடைப்பிற்குக் காரணம்.
தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாக- இணையம் வழியாக மற்றவர்களைத் தொடர்புகொள்ளலாம் என்ற அனுமதியும் வாய்ப்பும் கிடைத்தபோது என்னோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவள். ஜெயக்குமரனின் தூண்டுதல் வழியாகவே எனது முகநூல் நட்புப்பட்டியலில் இணைந்தாள். அது போர்க்களத்திலிருந்து எழுத்துக்களத்திற்கு நகர்ந்துகொண்டிருந்த காலகட்டம். தான் எழுதிய கதை, கவிதை போன்றவற்றை எனக்கு அனுப்புவாள்; குறைநிறைகள் கொண்ட விமரிசனத்திற்காகக் காத்திருப்பாள்; நானும் அவற்றைப் படித்துக் கருத்தியல் மற்றும் கலையியல்ரீதியான விமரிசனங்களைச் சொல்லுவேன். அவற்றைத் திருத்தி மறுபடியும் எழுதுவாள். அந்தப் பரிமாற்றம் ஆசிரிய – மாணவப் பரிமாற்றம் என்று திரும்பத்திரும்ப நன்றியோடு சொல்வாள். அதையெல்லாம் அவளது மரணத்தையடுத்து நான் எழுதிய அஞ்சலிக்குறிப்பில் தொகுத்துத் தந்துள்ளேன். வாசித்துக்கொள்க. (http://ramasamywritings.blogspot.in /2015/11/blog-post_4.html )

இப்போது ஒருகூர்வாளின் நிழலில் நூலுக்கு வருவோம். போராளியாக ஆன தனது வாழ்க்கையைக் கதைகளாக ஆக்கிவிட்டுச்செல்வதைவிட உண்மைகளாக மாற்றிச் சொல்லி விடவேண்டும் என்ற நெருக்கடியையும் அச்சத்தையும் நோயே உருவாக்கியிருக்கவேண்டும் என்பது என் அனுமானம். “ஒரு கூர்வாளின் நிழலில் என்ற தலைப்பில் விரைவில் நூலொன்றை வெளியிடப்போகிறேன்; அதற்கு அட்டை ஓவியங்கள் வாங்கித் தரவேண்டுமென” என்னிடம் உதவிகேட்டபோதுகூட, ‘தன்வரலாறு’ என்பதாகச் சொல்லவில்லை. அவளது மரணத்திற்குச் சில நாட்கள் முன்பு ஓவியர் ஞானப்பிரகாசம் ஸ்தபதியிடமிருந்து மூன்று ஓவியங்களைப் பெற்று, அவை தரக்கூடிய அர்த்தங்களைப் பற்றி விவாதித்து முடித்திருந்தோம். ஆனால் இப்போது அந்த ஓவியங்கள் இல்லாமல் தமிழினியின் முகமே அட்டைப்படமாக மாறி அந்த நூல் வந்திருக்கிறது. மரணம் உண்டாக்கிய மாற்றங்களில் இதுவுமொன்று.

10 இயல்களில் விரியும் தமிழினியின் இந்த நூல் 255 பக்கங்களில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் சில ஆயிரம் பக்கங்களில் விரித்து எழுதக்கூடிய அனுபவங்களைக் கொண்டவள் தமிழினி. விடுதலை அமைப்பிலிருந்த ஒரு பெண் போராளியின் முழுமையான தன்வரலாற்றுப் பிரதியல்ல. தன்வரலாற்றுப்பிரதிகள், ஒருவித அரசியல் பிரதியாகவே உலகமொழிகளில் வடிவம் கொண்டுள்ளன. பாலினரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் ஒடுக்கப் பெற்றவர்களாகத் தங்களைக் கருதிக்கொண்டவர்களின் விடுதலையை முன்னிறுத்திப்பேசும் தொனியைக் கொண்டவை. இந்தத்தொனியைக் கொண்டுவருவதற்காகத் தாங்கள் ஒடுக்கப்பட்ட அவலத்தை விரிவாகப் பேசுவது அந்தப் பிரதிகளின் பொது இயல்பு. அந்த அவலத்தை வாசிக்கச்செய்வதன் வழியாக ஒடுக்கியவர்களிடத்திலும் பொது வாசகர்களிடத்திலும் எழும்பவேண்டிய மனிதாபிமானச் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் உயிர்ப்பிக்கும் நோக்கும் அந்தப் பிரதிகளின் முதன்மை நோக்கமாக இருக்கும்.
உலக அளவில் பெண்களும், கறுப்பின ஆண்களும் தன்வரலாற்றுப் பிரதிகளை உருவாக்கித் தந்துள்ளனர். இந்தியச்சூழலில் ஒவ்வொரு மொழியிலும் பெண்களின் தன்வரலாற்றுப் புனைவுகளோடு தலித் தன்வரலாறுகளும் முக்கியத்துவம் பெற்றவை. அவைகளில் பலவற்றை வாசித்தவன் என்ற நிலையில் தமிழினியின் இந்த நூலைத் தன்வரலாற்றுத் தன்மைகொண்ட பிரதியென ஏற்க முடியவில்லை. தமிழினி இந்தப் பிரதியில் உருவாக்கும் உணர்வும் தொனியும் தன்வரலாற்றுக்கான எழுத்துமுறையிலிருந்து விலகியதாகவே இருக்கிறது.
பொதுவாக எந்தப் பிரதியிலிருந்து விலகிநின்று வாசிப்பவன் நான். இந்த விலகலின் தேவையை என்னுள் உருவாக்கியவர் கவியும் நாடக ஆசானுமான பெர்ட்டோல்ட் பிரெக்ட். எழுதுகிறவர்களுக்கும் நிகழ்த்துபவர்களுக்கும் அவர் உருவாக்கித் தந்த கலையியல் கோட்பாட்டான தூரப்படுத்துதலைக் (Alienation) கூடுதலாக வலியுறுத்தியவை பெண்ணியமும் தலித்தியமும். பெண்ணாகவும், தலித்தாகவும் இல்லாத ஒருவரால் அவற்றை உள்வாங்கிய எழுத்தைத் தரமுடியாது என வாதிட்ட காலகட்டத்தில் அவற்றோடு உரையாடல் செய்த வாசக அனுபவம் எனக்குண்டு. அதன் நீட்சியாகவே போர்க்கால – போர்க்களப் பிரதிகளையும் வாசிக்கவேண்டுமென நான் உணர்ந்தே இலங்கைத் தமிழ்ப் போர்க்கால எழுத்துகளை வாசித்துவருகிறேன். தமிழீழப்போராட்டமும் தமிழினியின் வாழ்க்கையும் எனது கவனத்தை ஏற்கெனவே ஈர்த்தவை என்ற காரணத்தால் கூடுதல் விலகலுடன் வாசிக்க நினைத்துத் தான் வாசித்தேன். அந்த விலகலைக் கட்டாயமாக்கும் தன்மையுடன் இருக்கிறது தமிழினியின் சொற்களும் மொழிப்பயன்பாடும்.
தமிழினி தனது நூலைக் கவனமாக வாசிக்கவேண்டிய பிரதியாகக் கருதியே எழுதியுள்ளார் என்பதற்கான ஆதாரமாக இதனைக் காட்டுகிறேன். :
“ இருபது வருசமா இயக்கத்தில் இருந்தன். எத்தனையோ சண்டையில் காயப்பட்டன். தாக்குதல் படையணிகளை வழிநடத்தவும் துவக்கு தூக்கிச் சுடவும்தான் எனக்குத் தெரியும். இனி வீட்டுக்குப் போய் என்ன செய்யப்போறன்”
“ நான் இயக்கத்தில் இருந்து சீருடையும் போட்டுக்கொண்டு துவக்கோட ஊருக்குள்ள போனபோது எல்லாரும் என்னைப் பார்த்த பார்வையில் ஒருமதிப்பு இருந்தது. நான் தங்களுக்காகப் போராடப் போனதற்காக சனங்கள் என்னைத் தங்கட வீட்டுப்பிள்ளையாகவே நினைச்சு உறவுகொண்டாடினவையள். இப்ப நான் ஊருக்குள்ள போறன். சீருடையில்லை. துவக்கில்லை. ஏன் சாதாரணமாக உடுத்துறதுக்கு நல்ல உடுப்பு இல்லை. ஏனெண்டால் நான் எனக்கென்று எதுவும் உழைச்சதேயில்லை. இப்ப பாக்கிற ஆக்கள் முகத்தை திருப்பிக்கொள்ளுகினம் அல்லது ஏளனமாக சிரிக்கினம். ‘இதுகள் உயிரோட வந்ததுக்கு சயனைட்டைக் கடிச்சிருக்கலாம்’ எனக்குப் பின்னால் இப்பிடியான குரல்களும் கேக்குது. இப்ப நான் ஒரு செல்லாக்காசு”
“இது அப்ப இயக்கத்தில் இருந்தது. இப்ப ஆமிக்காரரோட வேலை செய்யுது. அங்க போறதுகளுக்கு நல்ல பெயரில்ல.”
இந்தப்பகுதி இந்த நூலின் கடைசி அத்தியாயத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டியவை. ஆனால் நான்கு இயல்களை முடித்துவிட்டு ஐந்தாவது இயலின் – ஆயுதப்போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும் – தொடக்கத்தில் எழுதுகிறார். எழுதிவிட்டு அவரே கேட்கிறார்: “ஏன் இவ்விதமாக இந்தப்பகுதியைத் தொடங்குகிறேன் என என்னை நானே கேட்டுப் பார்த்தேன். இதுதானே இன்றைய யதார்த்தமாக இருக்கிறது. பெண் போராளிகளான நாங்கள் ஒரு காலத்தில் வானத்தை வில்லாக வளைக்கக் கனவு கண்டோம். இப்போது எல்லாக்கனவுகளும் கலைந்து நிஜத்தின் முற்றத்தில் விழுந்து கிடக்கிறோம். (ப.99-100)
10 இயல்களாக அமைந்துள்ள இந்நூலின் முதல் ஐந்தும் ஒருவித நேரடிச் சாட்சியத்தின் விவரிப்புகளாகவும் பின் ஐந்து இயல்கள் முன்னர் விவரித்த நிகழ்வுகளால் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவரின் மனச்சாட்சியின் ஒப்புதல் வாக்குமூலம் போலவும் இருக்கிறது. நேரடிச் சாட்சியப்பகுதிகளின் வழியாக போர்க் காலத்தையும் போர்க்களத்தையும் நேரடியனுபவமாக உணராத என்னைப் போன்ற ஒருவருக்கு உண்டாக்கித் தரும் வாசிப்பனுபவம் குறிப்பிடப்படவேண்டியது : 35 ஆண்டு காலம் வெல்லப்பட முடியாத போராளி இயக்கமாகக் கட்டியெழுப்பப்பெற்ற விடுதலைப்புலிகள் போர்ப்பயிற்சியைப் பெறுவதை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தனர். உலகமெங்கும் நடந்த விடுதலைப்போராட்ட வரலாறுகளும், அவற்றிற்குப் பின்னாலிருந்த சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் போன்ற சிந்தாந்த உரையாடல்களுக்குப் பரிச்சயமற்றவர்களாகவே உருவானார்கள் என்பதைச் சாட்சியமாக்குகிறது. அமைப்புக்குள் உருவாகும் முரண்பாடுகள் அனைத்தும் தலைவர் பிரபாகரனின் தலைமைக்கெதிரான துரோகிப்பட்டங்களால் தீர்த்துக் கட்டப்பட்டன என்பதையும் முன்வைக்கின்றது. அந்த முன்வைப்புகள் கூட முழுமையான புரிதலோடு முன்வைக்கப்படவில்லை. தலைமையோடும், தலைமைக்குப் பக்கத்திலிருந்த சுப. தமிழ்ச் செல்வன் போன்ற உயிர்பொறுப்பாளர்களுடன் நேரடித்தொடர்புகொள்ளும் நிலையிலிருந்த தமிழினி போன்ற பொறுப்பாளத் தலைவிக்கே இத்தகைய புரிதல் தான் இருந்தன என்பதை அறியும்போது கீழ்மட்டப்போராளிகளின் அரசியல் அறிவும், விடுதலைக்குப் பிந்திய தேசக்கட்டுமானத்தை உருவாக்கும்போது அவர்களின் பங்களிப்பு பற்றிய அறிதலும் பெரிய கேள்விக்குறியே. ஆயுதங்களைக் காவுதலும் காத்தலும் காதலித்தலும், ஆணையையேற்று கரும்புலிகளாக மாறி உயிரைவிடுவதையுமே உயர்ந்த லட்சியமாகக் கற்பித்து உருவாக்கிய ஓர் இயக்கத்தின் சாட்சியமாக அந்தப் பகுதிகளை வாசித்துக் கடப்பதற்கு விலகலான மனநிலை மிகமிக அவசியம். அதனைத் தொடர்ந்து அமைவது ஒப்புதல் வாக்குமூலம். இந்தப் பகுதியில் இதுவரை ஈழப் போராட்டத்தைப் பற்றிய செவிவழிச் செய்திகளாகவும் வெளியில் சொல்லத் தயங்கும் ரகசியங்களாகவும் இருந்தனவற்றைச் சாட்சியப்படுத்துகிறார் தமிழினி. இயக்கவரலாற்றில் தலைவர் பிரபாகரனோடு உறவும் முரணுமாக இருந்த முக்கியமானவர்கள் பற்றிய செய்திகளை விலகிநின்றே விவரிக்கிறார் அவர். மாத்தையா மரணம், கருணாவின் விலகல், சுப. தமிழ்ச்செல்வன், பொட்டு அம்மான், அன்ரன் பாலசிங்கம் இடம் போன்றவற்றை விவரிக்கும்போது நேரடிச்சாட்சியாக இல்லையென்றாலும் நம்பகத் தன்மையற்றதாகவும் இல்லை.
இரண்டாவது ஒப்புதல் வாக்குமூலப் பகுதியில் வெளிப்படும் தொனி, தன்னை விலக்கிப் பிறர்மீது பலிபோடும் நோக்கம் கொண்டதாக இல்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். தன்னை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட போராளித் தலைமைகள் கேள்விக்கப்பாற்பட்ட ஒற்றைத் தலைமையை உருவாக்கியுருவாக்கி வளர்த்த அறியாமையை விவரிக்கிறது. “தலைமை இருக்கிறது; தலைமை பார்த்துக்கொள்ளும்; தலைமை இடும் கட்டளைகளுக்குக் கீழ்படிதலே போராளியின் கடமை” என வாழ்ந்த – வாழப் பழக்கப்பட்ட ஓர் அமைப்பின் நீண்ட நெடிய தியாகவாழ்வின் துயரம் தோய்ந்த வரலாறு இது. தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய போர் முழுமையும் உள்நாட்டுப் போராக மட்டுமே இருந்திருந்தால் தோல்வியடையாத போராகவும், தனித்தமிழீழத்தை வென்றெடுத்திருக்கக் கூடிய ஒன்றாகவே முடிந்திருக்கும் என்ற நம்பிக்கை தமிழினியிடம் வெளிப்படுகிறது. ஆனால் இலங்கைத் தீவின் புவிசார் அமைப்பும், பன்னாட்டு நெருக்கடிகளும் அரசுக்கு அவை செய்த உதவியும், குறிப்பாக இந்தியாவிலிருந்தும்/ தமிழ்நாட்டிலிருந்தும் எதிர்பார்க்கப்பெற்ற உதவிகளும் பற்றி விரிவாக அவர் எழுதவில்லையென்றாலும் அவற்றிலெல்லாம் தலைமை கவனம் செலுத்தாமல், சரியான முடிவுகளை எடுக்கத்தவறியது என்ற விமரிசனத்தைச் சரியாகவே வைத்துள்ளார். தமிழ்நாட்டு நண்பர்களின் கையாளாகத் தனத்தையும் நாசுக்காகச் சொல்லியுள்ளார். இந்நூலில் இப்போது வைக்கும் இத்தகைய விமரிசனங்களைப் போராட்டக் காலத்தில் வைக்கமுடியாமல் போன வருத்தத்தோடு எழுதும் தமிழினி, “அந்த வரலாற்றுக்குள் நானும் இருந்தேன்” எனச் சொல்வதின்மூலம் தன்னுடைய வரலாற்றை ஈழப்போராட்டத்தின் வரலாறாக ஆக்கியிருக்கிறார்.

koor
ஒரு கூர்வாளின் நிழலில், தமிழினி, காலச்சுவடு, பிப்ரவரி 2016

Copyright © 1419 Mukadu · All rights reserved · designed by Speed IT net