எந்தவொரு அடிப்படைவாத இயக்கங்களும் நாட்டுக்குள் செயற்பட இடமளியோம்.
எந்தவொரு அடிப்படைவாத இயக்கமும் நாட்டுக்குள் செயற்பட இடமளியோம் என்றும் தாக்குதல் நடத்திய சூத்திரதாரிகளை தேடும் நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் ஊடக அமைச்சருமான ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் தேவையான ஆலோசனைகள் முப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் பல பாகங்களிலும் நேற்று காலை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவிர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேற்படி தாக்குதல் சம்பவத்தையடுத்து விசேட பாதுகாப்பு சபை கூட்டமானது பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக் காலை இடம்பெற்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ, அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் உட்பட உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில் :-
நேற்று காலை 8.30 தொடக்கம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த சம்பவத்தில் உயிரிழந்த அனைவரினதும் இறுதிச் சடங்குகளை அரசாங்கத்தின் செலவில் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு படையினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் நாட்டின் முக்கிய பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் எவராக இருந்தாலும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளைத் தண்டிப்பதில் பாதுகாப்பு படையினர் பாரபட்சமற்ற முறையில் செயற்படுவார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.