விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் எனக் கூறிய அதே அரசியல்வாதிகள் இன்று நற்சான்று கருத்து!
விடுதலைப் புலிகளின் மரபுவழி போராட்டத்தினை பயங்கரவாதம் என தெரிவித்துவந்த அதே தென்னிலங்கை அரசியல்வாதிகள் இன்று நற்சான்று கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
அதில் முக்கியமாக அண்மையில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் விடுதலைப்புலிகள் குறித்து நல்லமாதிரியாக குறிப்பிட்டுள்ளார் என ஸ்ரீதரன் சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் (வியாழக்கிழமை) ஊடக சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என கடந்த காலங்களில் கூறிவந்த அதே தலைமைகள் இன்று அவர்களை நற்சான்றுபடுத்தும் வகையில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் சர்வதேசத்தின் பார்வை எவ்வாறு இருக்கும் என நம்புகின்றீர்கள்? என்று ஊடகவியலாளரால் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்,
“சிறந்ததொரு கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். உண்மையில் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என பல தரப்பினரும் கருத்துக்களை கூறி வந்தனர். அவர்களின் மரபுவழி போராட்டத்தினை பயங்கரவாதத் தாக்குதல் என தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் விடுதலைப்புலிகள் குறித்து நல்லமாதிரியாக குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் இவ்வாறான தாக்குதல்கள் நடாத்தகூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்த போதிலும், அவர்கள் தாக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, அரசாங்கம் அன்று கூறிய பொய்யான தகவல்களை வைத்து சர்வதேசம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்திருந்தது. இன்று அதே அரசியல் தலைவர்கள் விடுதலைப் புலிகள் தொடர்பாக கூறும் கருத்துக்கள் குறித்து சர்வதேசம் கவனம் செலுத்தும் என நம்புகிறேன்.
இதனிடையே, அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலால், இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகள், யுத்தக் குற்ற மீறல்கள் எவையும் மறையப்போவதில்லை” என்று தெரிவித்தார்.