கிழக்கு லண்டனில் பள்ளிவாசலுக்கருகே துப்பாக்கிச்சூடு!
கிழக்கு லண்டனில் பள்ளிவாசலொன்றுக்கு வெளியே துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
புனித றமழான் மாதத்தில் மாலை நேர பிரார்த்தனைகள் இடம்பெற்றுவந்த சந்தர்ப்பத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
லிஃபோர்ட் மாவட்டத்திலுள்ள செவன் கிங் மஸ்ஜிட் பள்ளிவாசலுக்குள் துப்பாக்கியுடன் ஒருவர் உள்நுழைய முயற்சிப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிச்சூட்டில் எவ்வித பாதிப்புகள் இடம்பெறவில்லை என உறுதிபடுத்தியுள்ளனர்.
இதேவேளை, வெளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் எவரும் காயமடையவில்லை என்றும் பள்ளிவாசல் கட்டடத்திற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் ஸ்கொட்லண்ட் யார்ட் அறிவித்துள்ளது.
அத்துடன், இதுவொரு பயங்கரவாதத் தாக்குதல் என நம்பவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த சம்பவத்தை அடுத்து பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று இரவு முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
50 பேரின் உயிரை காவுகொண்ட நியூசிலாந்து கிறிஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் தாக்குதல் மற்றும் இலங்கையில் 253 பேரின் உயிரை பலிகொண்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் ஆகியவற்றை தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் வழிபாட்டு தலங்கள் மீதான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.