மம்தா பானர்ஜியின் ஒளிப்படத்தை வெளியிட்ட பெண் கைது!
மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை விகாரமாக சித்தரிக்கும் ஒளிப்படத்தை வெளியிட்ட பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம்- ஹவ்ரா மாவட்டத்தின் பெண் பா.ஜ.க நிர்வாகியான பிரியங்கா ஷர்மாவை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர்.
குறித்த ஒளிப்படம், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு அவரது ஆதரவாளர்கள் முறைப்பாடு தெரிவித்தனர்.
குறித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணையை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபரான பெண்ணை கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் நடைபெற்ற மெட்காலா நிகழ்வில் இந்திய நடிகை பிரியங்கா சொப்ரா, மிகவும் கேளிக்கையான தோற்றத்தில் பிரசன்னமானார்.
இதன்போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்நிலையிலேயே பிரியங்கா சொப்ராவின் குறித்த ஒளிப்படத்தை மாற்றியமைத்து மம்தா பானர்ஜியின் முகம் பொருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு அவரின் ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.