ஐ.பி.எல் 2019: 4ஆவது முறையாகவும் மகுடம் சூடியது மும்பை அணி!
12ஆவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி 4ஆவது முறையாகவும் மும்பை அணி ஐ.பி.எல் கிண்ணத்தை வென்றுள்ளது.
ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த போட்டி நடைபெற்றது.
இதன்போது நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி தலைவர் ரோஹித் ஷர்மா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
இதன்போது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் மும்பை அணி 8 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது.
அவ்வணி சார்பாக பொலார்ட் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மேலும் குயின்டன் டி கொக் 29 ஓட்டங்களையும் ஈசன் ஹிசான் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சென்னை அணி சார்பாக பந்துவீச்சில் தீபக் சஹார் 3 விக்கெட்களையும் ஷர்டுல் தாகூர் இம்ரான் தஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.
இதன்போது பிளிசிஸ் 26 ஓட்டங்களையும் ரெய்னா 8 ஓட்டங்களையும் ராயுடு 1 ஓட்டங்களையும் டோனி 2 ஓட்டங்களையும் பெற்று வெளியேறினர்.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 88 ஓட்டங்கள்களை மாத்திரமே பெற்றது.
இந்நிலையில் மலிங்க வீசிய 16 ஓவரில் பிராவோ ஒரு சிக்சரும் வாட்சன் 3 பவுண்டரிகள் அடித்து 108 ஓட்டங்களை பெற்றனர். இதனால் 12 பந்துகளில் 18 ஓட்டங்கள் மாத்திரமே சென்னை அணிக்கு தேவைப்பட்டது.
ஆனாலும் கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்ட நிலையில் 1 ஓட்ட வித்தியாசத்தில் சென்னை அணியை, மும்பை அணி வீழ்த்தி வீழ்த்தி 4ஆவது முறையாகவும் ஐ.பி.எல் கிண்ணத்தை தனதாக்கியுள்ளது.