தமிழ் பிள்ளைகளை பலவந்தமாக அமைப்பில் இணைத்துள்ளார் சஹரான்!

தமிழ் பிள்ளைகளை பலவந்தமாக அமைப்பில் இணைத்துள்ளார் சஹரான்!

தமிழ் பிள்ளைகளை பலவந்தமாக அழைத்துச் சென்று தனது அமைப்பின் சஹரான் இணைத்துள்ளார் என்றும் இந்த விடயங்கள் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் மட்டக்களப்பு, மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுமணரத்ன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“இலங்கையில் ஏற்பட்டுள்ள குண்டுத்தாக்குதல்களினால் அனைவரது இயல்பு வாழ்க்கையும் இன்று பாதிப்படைந்துள்ளது.

இந்தப் பிரச்சினை ஏற்பட்டவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு நாம் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தோம்.

ஏனெனில், நீராவோடை பாடசாலை மற்றும் வவுணத்தீவு பிரதேசத்தின் பாடசாலைகள் அனைத்தும் பாதுகாப்பற்ற நிலையில்தான் இன்னும் இருக்கின்றன.

இங்கு மாணவர்களை அனுப்ப எந்தவொரு பெற்றோரும் தயாராக இல்லை. இதுதொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

சஹரான் எனும் நபர் ஹிஸ்புல்லாவின் துணையுடனேயே தனது செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

அத்தோடு, மட்டக்களப்பில் நீதித்துறை பிரதானிகளும் இந்த செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்பதை நான் பொறுப்புடன் இங்குக் கூறிக்கொள்கிறேன். இதனை என்னால் நிரூபிக்கவும் முடியும்.

இதனால்தான் சந்தேகத்தில் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்படுகிறார்கள்.

எப்படி இவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்பது பெரிய கேள்வியாகவே இருக்கிறது.

இவ்வாறான செயற்பாடுகளினால் தமிழர்களே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். 30 வருட யுத்தம் காலமாக துன்பத்தில் இருந்த இந்த சமூகம் மீண்டும் அந்த நிலைமைக்குத் திரும்ப நாம் இடமளிக்க முடியாது.

இங்குள்ள தமிழ் பிள்ளைகளை பலவந்தமாக சஹரான் அழைத்துச் சென்று, தனது அமைப்பில் இணைத்துக்கொண்டுள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால், இன்றுவரை அந்த பிள்ளைகளை கண்டுப்பிடித்துக்கொள்ள முடியாதுள்ளது. இது பாரதூரமான விடயமாகும்.

அத்தோடு, இந்நாட்டில் அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டம் இருக்க வேண்டும். ஷரீயா சட்டம் எல்லாம் யாருடைய தேவைக்காக நடைமுறையில் இருக்கின்றன? இவற்றினால்தான் நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இதுதொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். நாம் அரசாங்கத்துக்கு இன்னும் இரண்டு வாரக் கால அவகாசம் வழங்குகிறோம்.

இன்று நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

எனவே, இவ்விடயங்கள் தொடர்பில் அனைவரும் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்.

காத்தான்குடி, மட்டக்களப்பை முழுமையாக பரிசோதித்து மாணவர்கள் உள்ளிட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

14- 15 நாட்களுக்குள் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்காவிட்டால் சட்டத்தை நாம் கையில் எடுப்போம்” என மங்களராமய விகாராதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © 8972 Mukadu · All rights reserved · designed by Speed IT net