அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படும் ஆபத்தில் இலங்கை தமிழ் குடும்பம்!

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படும் ஆபத்தில் இலங்கை தமிழ் குடும்பம்!

அவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம் – பிரியா குடும்பம் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த குடும்பம் விரைவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்தடைந்தனர்.

இத்தம்பதிக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த இரு சிறு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

எனினும், இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் கடந்த வருட ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், சட்டநடவடிக்கை காரணமாக அந்த நடவடிக்கை இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதையடுத்து நடேசலிங்கம் – பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு ஜுன் 21ம் திகதி மெல்பன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது.

எனினும், நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை கடந்த டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து இறுதி முயற்சியாக உயர்நீதிமன்றில் இக்குடும்பம் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் இன்றைய தினம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இக்குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி நாளை மெல்பன் state library முன்பாக பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 5430 Mukadu · All rights reserved · designed by Speed IT net