08-03-18
கி.பி அரவிந்தன் அண்ணையின் 3வது ஆண்டு நினைவு நாள்!
என் மனதுக்கு நெருக்கமாயிருந்த மனிதர்களில் ஒருவர். ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடியாக அவரின் வகிபாகமும், இலக்கிய ஆளுமையாக அவரின் பங்களிப்பும் பற்றி அறிந்திருந்தபோதும் 2008இலிருந்துதான் அவருடன் பழகும் தருணங்கள் அமைந்தன.
அவர் இறுதிக்காலங்களில் முதன்மையாக முன்னெடுத்த ஊடகப்பணியில் இணைந்து பணிசெய்யக் கிடைத்த வாய்ப்பின் மூலமே அவருடன் பழகுகின்ற உரையாடுகின்ற காலங்கள் அமைந்தன
.
அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளம் இருந்திருக்கிறது. அவருடனான உரையாடல்கள் பார்வையை அகலப்படுத்த உதவக்கூடியன. வியத்தகு ஆளுமையாகவிருந்தபோதும் எளிமை அவரது அடையாளம். அவருடைய தகமைக்குரிய வெளிச்சத்தைத் தலைக்கு ஏற்றிக்கொள்ளாத, எக்காலத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தாத பண்பு அவருக்கிருந்தது.
இறப்பு நேர்வதற்கு 8 மாதங்களுக்கு முன்னர்,
(2014 நடுப்பகுதியில்) தமிழ்3 வானொலிக்காக அவருடன் ஒரு உரையாடலை மேற்கொண்டிருந்தேன். அவருடைய பிரெஞ் மொழியாக்கக் கவிதைத்தொகுப்பு நூல்வெளியீட்டினை முன்வைத்து தொடங்கியது அந்த உரையாடல்.
ஆரம்பகால போராட்டச் செயற்பாடுகள் தியாகி பொன் சிவகுமாரனோடு இயங்கிய காலம் மீதான நினைவுத் தெறிப்புகள், அவருடைய இளமைக்கால இலக்கிய ஈடுபாடு, இலக்கியவாதியாக உருவாகிய புறச்சூழல், தமிழகத்திலிருந்து அரசியல், ஊடகப்பணி ஆற்றிய காலங்கள், ஈழ விடுதலைக்கான போராட்டச் செயற்பாடுகள், புலம்பெயர் வாழ்வியல், புலம்பெயர் இளைய சமூகம், மொழி, பண்பாடு சார்ந்த செயற்பாடுகளில் கைக்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் என நீண்டு சென்றது அந்த நேர்காணலுக்கான உரையாடல்
இவை அனைத்திற்குமான தனது பார்வையையும் அனுபவங்களையும் விரிவாகவும் ஆழமாகவும் பகிர்ந்து கொண்டார். அந்த நேர்காணலின் எழுத்து வடிவம் மூன்று பகுதிகளாகப் பின்னர் புதினப்பலகை இணையத்தளத்திலும் 2016ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.
தமிழ் அரசியல், இலக்கியப் பரப்பில் அவருடைய வகிபாகத்தினை தனிமனித வகிபாகமாகச் சுருக்கிவிடமுடியாது. அவர் எத்தகையை சிந்தனைகளைக் கொண்டிருந்தார், எப்படி வாழ்ந்தார், மக்கள் மீது எத்தகைய நேசிப்பினைக் கொண்டிருந்தார், விடுதலையை அவாவிநின்ற மக்களுக்காக எந்தெந்தத் தளங்களில்; செயற்பட்டார், தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் எத்தகைய முற்போக்கான மாற்றங்கள் ஏற்படவேண்டுமென கனவு கண்டார் என்று நோக்குமிடத்தும், அவருடைய நான்கு தசாப்த பொதுவாழ்க்கையை ஆராயுமிடத்தும், தமிழ் அரசியல்- சமூக- படைப்பிலக்கியப் பரப்பில் வரலாற்று வகிபாகமொன்றினை அவர் கொண்டிருக்கின்றார் என்பதைக் கண்டடையவும் உணரவும் முடியும்.
அவர் மறைந்த ஒராண்டுக்குள் அவர் பற்றிய நினைவுகளையும் அவருடைய நான்கு தசாப்த போராட்ட, கலை இலக்கிய, சமூக மற்றும் ஊடகத்தளங்களில் அவருடைய வகிபாகத்தையும் பதிவு செய்த மூன்று காத்திரமான நூல்கள் வெளிவந்துள்ளன. புலம்பெயர் தமிழ்ச்சூழலில் நான் அறிந்த வரையில் ஒருவர் மறைந்த ஓராண்டுக்குள் இத்தகு காத்திரமான நூல்கள் வெளிவந்திருக்கவில்லை. அவர் கொண்டிருந்த வரலாற்று வகிபாகத்தின் முக்கியத்துவத்தினையே இது காட்டுகின்றது.
நன்றி:ரூபன் சிவராஜ்