தனமல்வில குடா ஓயா பகுதியில் பெருந்தொகையிலான ஆயுதங்கள் மீட்பு.
விவசாயப் பண்ணையருகேயுள்ள ஆயுதக் கிடங்கினை குடா ஓயா பொலிசார் கண்டு பிடித்து பெருந்தொகையிலான ஆயுதங்களை மீட்டதுடன்,விவசாயப் பண்ணையின் உரிமையாளரான மொகமத் யஸ்மி அப்துல் வாஹிட் என்ற நபரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந் நபர் இலங்கையிலிருந்து அமேரிக்கா சென்று வாழ்ந்து வந்தவராவார்.
அத்துடன் அமெரிக்கா பிரஜாவுரிமையையும் இவர் பெற்றிருக்கின்றமை ஆரம்ப விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
தனமல்விலைப் பகுதியைச் சேர்ந்த குடா ஓயா பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிசார் விரைந்து குறிப்பிட்ட விவசாயப் பண்ணையைச் சுற்றி வலைத்து தேடுதல்களை மேற்கொண்டனர்.
அவ் வேளையிலேயே பொலிசார் ஆயுதக் கிடங்கினை கண்டுபிடித்து அவற்றை மீட்டனர்.
ஸ்னைபர் துப்பாக்கிகள் இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள், கைத் துப்பாக்கிகள் உள்ளிட்டு எட்டு துப்பாக்கிகள் இரு நவீன ரிவோல்வர்கள்,சன்னங்கள் மற்றும் தோட்டாக்கள் 4080,இரு கைவிலங்குகள்,பதினான்கு கத்திகள்,நான்கு மின்சார விளக்குகள் உள்ளிட்ட யுத்த உபகரணத் தொகுதிகள் ஆகியனவே மீட்கப்பட்டவைகளாகும்.
கொழும்புப் பகுதியின் கொகுவல சரணங்கார மாவத்தையின் வீடொன்றின் உரிமையாளரான மொகமத் யஸ்மி அப்துல் வாஹிட் என்ற நபர்,குடாஓயாவில் விவசாயப் பண்ணையொன்றையும் நடாத்தி வந்துள்ளார்.
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிசார் ஆயுதக் கிடங்கை கண்டு பிடித்து ஆயுதங்களை மீட்கும் போது உரிமையாளர் விவசாயப் பண்ணையில் இருக்கவில்லை.
அவர் கொகுவல வீட்டிற்கு சென்றதாக அறிந்த பொலிசார் கொகுவல பொலிசாருடன் இணைந்து குறிப்பிட்ட நபரைக் கைது செய்தனர்.
அவ் வேளையில் அவ் வீடு சோதனைக்குற்படுத்தப்பட்ட போதுரூபவ் “சொட்கன்” என்று கூறப்படும் அனுமதி பெற்ற இரு துப்பாக்கிகளும் கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.
இது குறித்து குடா ஓயா பொலிசாரும்,கொகுவல பொலிசாரும் இணைந்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.