சிறிலங்கா கடற்படைக்கு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியளிக்கும் அமெரிக்கா.

சிறிலங்கா கடற்படைக்கு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியளிக்கும் அமெரிக்கா.

அரபிக் கடலில் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு, அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பலில் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் சான்டியாகோவை தளமாக கொண்ட, வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பல்களான, USS Spruance மற்றும் USS Stockdale ஆகியன, கடந்த ஒக்ரோபர் மாமத்தில் இருந்து இந்தோ-பசுபிக் மற்றும் மத்திய கிழக்கில் பணிகளை மேற்கொண்டு விட்டு, நேற்று முன்தினம் தளம் திரும்பியுள்ளன.

John C. Stennis விமானந்தாங்கி தாக்குதல் அணியில் இடம்பெற்றிருந்த இந்த நாசகாரி கப்பல்களில் ஒன்றான, USS Spruance தெற்கு அரபிக் கடலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து, நீர்மூழ்கி எதிர்ப்பு போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தது என்று அமெரிக்க தகவல் ஒன்று கூறுகிறது.

அமெரிக்க – சிறிலங்கா கடற்படையினர் CARAT 2019 கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டிருந்த போதே, அரபிக் கடலில் இருதரப்பு நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க கடற்படை கூறியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கூட்டுப் பயிற்சிக்காக USS Spruance நாசகாரி போர்க்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கடந்த மாதம் 19ஆம் நாள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், எத்தனை சிறிலங்கா படையினருக்கு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. எத்தனை நாட்கள் பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்பன போன்ற விபரங்களை சிறிலங்கா கடற்படையோ, அமெரிக்க கடற்படையோ அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

Copyright © 2946 Mukadu · All rights reserved · designed by Speed IT net