முஸ்லிம் அரசியல் தலைமைகள் இன்று மக்களுக்காக பேசாமல் மக்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கின்றனர் -தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ்
மாமனிதர் அஷ்ரஃப்பிற்கு நிகர் அவரே தவிர வேறு யாருமில்லை அத்துடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இன்று மக்களுக்காக பேசாமல் மக்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கின்றனர்.
எனவே அமைச்சர் றிசாட் பதவி விலக வேண்டும்.
சமூகத்திற்கு உபயோகமில்லாத அமைச்சுப் பதவியை துறக்க மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் தெரிவித்தார்.
இணையத்தளம் ஒன்றின் ஏற்பாட்டில் சமகாலம் தொடர்பில் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் அவர்களுடன் நமது ஊடகங்கள்’ எனும் கருத்துரையுடன் ஊடகவியலாளர் சந்திப்பு இப்தார் நிகழ்வும் நேற்று புதன் கிழமை (22) அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் வள நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தனது கருத்தில்முஸ்லீம் காங்கிரஸ் நாங்கள் வளர்த்த கட்சி.
அதற்காக நிறையவே தியாகங்களை நாங்கள் செய்திருக்கின்றோம்.எங்களுடன் கூட இருந்த பல உடன்பிறப்புகளை இழந்திருக்கின்றோம்.அவ்வாறு பல தியாகங்களுக்கு மத்தியில் வளர்த்த கட்சி எங்களுடையது என சொல்கின்ற போது எவரும் குறுக்கே நிற்க முடியாது.
ஆனால் தற்போது முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் நாம் உட்பட பலரும் வெளியேற தற்போது இடம்பெறுகின்ற காரணங்களை கூற முடியும்.
குறிப்பாக நாட்டின் நிலைமையினை எடுத்துக்கொள்ளலாம். நாட்டைப்பற்றியும் சமூகத்தை பற்றியும் அன்றி முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் அவரது அரசியலை முன்னெடுக்கவில்லை.
இந்த நாட்டை பற்றி அறிந்த அவர் முஸ்லீம் காங்கிரஸை காலப்போக்கில் அக்கட்சியை கைவிட்டு நாட்டை பற்றி சிந்தித்ததுடன் நாட்டில் வாழும் மூவின மக்களின் வாழ்வுரிமையை கருத்தில் கொண்டு புதிய கட்சி ஒன்றினை சிந்தித்தார்.
பல கட்சிகள் இருந்தும் கூட எல்லா மக்களும் தத்தமது பிரச்சினையை தீர்க்கக்கூடிய வகையில் ஒரு கட்சி ஒன்றினை உருவாக்கியதை நினைவூட்ட விரும்புகின்றேன்.
அவரது அரசியல் வாழ்வில் குறிப்பாக அவர் கூறியதாவது ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருக்கின்ற வரை அந்த பஸ்ஸில் தானும் சமூகமும் ஏறமாட்டாது என்று சொன்னார்.
ஏன் அதனை சொன்னார் என்றால் ரணில் விக்கிரம சிங்கவின் வெளிநாட்டு கொள்கை தான் காரணம் என கூறினார்.
இவரது வெளிநாட்டு கொள்கை என்பது உலக நாடுகளை ஆக்கிரமிப்பு செய்வது சூதுகளை செய்வது ஆயுதங்களை செய்வது ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக யுத்தங்களை உருவாக்குவது மருந்துகளை விற்பனை செய்வதற்காக நோய்களை உருவாக்குதல் உள்ளிட்ட சில நாடுகளின் வெளிநாட்டு கொள்கைக்கு எதிராக செயற்படுவது தொடர்பாகவே தலைவர் அஸ்ரப் சிந்தித்தார்.
தற்போது அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பின்னர் இந்த நாட்டுக்கு தலைவர் யார் என்பதே தெரியாமலுள்ளது.
நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடைபெறும் என புலனாய்வுப் பிரிவினர் மிகத் துல்லியமாக அறிக்கை வழங்கியிருந்தும் அதுபற்றி தனக்குத் தெரியாது என்று ஜனாதிபதி சொல்கிறார்.
இதே வேளை பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களுக்கு தன்னை அழைப்பதில்லை என்று பிரதமர் கூறுகிறார்.
அதனால்தான் கேட்டேன் இந்த நாட்டுக்கு தலைவர் யார்? என்று நான் கேட்டேன் .பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் ஜனாதிபதி இந்த நாட்டில் இருக்கத் தக்கதாக அமெரிக்க ஜனாதிபதி தொலைபேசி மூலம் பிரதமரைத் தொடர்பு கொண்டு பேசினாரே அதற்குரிய நியாயம் என்ன என்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நான் கேட்டேன்.
நாட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுடன் ஐ.எஸ் அமைப்பு தொடர்புபட்டிருக்கிறது என்றவுடனேயே இதனை அமெரிக்காதான் செய்தது என்பது புரிகிறது. அதற்கு இந்தியாவும் துணை போகிறது.
அந்தத் தாக்குதலுக்கு அரை வேக்காட்டுத்தனமான சஹ்ரான் போன்றோர் காசு கொடுத்து வாங்கப்பட்டுள்ளார்கள்.இவ்வாறான பயங்கரவாதச் செயல்களுக்கு சிங்களவர்கள் தமிழர்கள் என்று பலரும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
அதே போன்று தற் போது ஐ.எஸ் அமைப்பு என்கிற பெயரில் இரண்டு மூன்று நாடுகள் நமது நாட்டை ஆக்கிரமிக்கப் போகிறது என்று அந்த அனைத்துத் தலைவர்கள் கூட்டத்தில் நான் கூறிய போதிலும் அதை புரிந்து கொள்ளாமல் சஹ்ரானைப் பற்றியும் இப்றாகிம் ஹாஜியாரைப்பற்றியும் பேசிக் கொண்டிருக்க உங்களுக்கு வெட்கமில்லையா என்று கேட்டேன்.
மாகந்துர மதுஷ் என்பவர் முஸ்லிமா? இல்லையே. அவர் செய்த அநியாயத்துக்காக அவர் பௌத்தர்தான் என்பதற்காக யாரும் விகாரைகளை உடைத்தோமா? இல்லையே. மதுஷ் என்பவர் தேவைப்பட்டவரைக் கொல்லலாம் வேண்டிய இடங்களுக்கு போதைப் பொருள் கடத்தலாம்.
ஆனால் அதுபற்றி கேட்க மாட்டார்கள். ஆனால் இன்றைய நிலையை வைத்து முஸ்லிம்களைப் பார்த்து தமிழர்களும் பயங்கரவாதிகள் என்கின்றனர். பயங்கரவாதச் செயல்களைப் பிரபாகரன் செய்யவில்லையா? யார் செய்தாலும் பிழைதான்.
கேவலமான மனிதாபிமனாத்துக்கு அப்பாற்பட்ட கொலைகளை பிரபாகரன் செய்தார். குழந்தைகள் கர்ப்பிணிகள் தொழுது கொண்டிருந்தவர்கள் என்று கொன்று குவித்தார். அப்போது நாங்கள் சொன்னோம்.
இது நீதியற்றது இந்தப் போராட்டம் வெற்றி பெறாது சண்டியனின் வாழ்வு சந்தியிலேதான் முடியும் என்றோம். அதுவே நடந்தது.
மனிதனை இப்படிக் கொன்று குவிக்குமாறு இந்து சமயத்தில் இஸ்லாத்தில் பௌத்தத்தில் சொல்லப்பட்டுள்ளதா? இல்லை.
இந்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அளுத்கம முஸ்லிம்கள் மீது வன்முறை நடத்தப்பட்டபோது அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறோம் ஆட்சியை மாற்றப் போகிறோம் என்று முஸ்லிம் தலைவர்கள் கூறியதோடு அடுத்த தேர்தலில் வாக்குகளையும் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் இப்போது அந்த முஸ்லிம் தலைவர்கள் பூனையை விடவும் மோசமாக உள்ளார்கள்.
இருந்த உரிமைகளை விடவும் மேலதிகமான உரிமைகளை முஸ்லிம் மக்களுக்குப் பெற்றுத் தருவதாகக் கூறி முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்ற முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் இப்போது முஸ்லிம்களுக்கு இருந்த மத உரிமைகளையும் இல்லாமலாக்கி விட்டார்கள்.
இந்த அரசுக்கு முட்டுக்கொடுப்பவர்கவே உள்ளவர்கள் பள்ளிவாசல்களில் வாள்கள் எதற்காக இருக்கிறது என்றால் சரியாக பதிலளிக்க முடியாமல் திணறுகிறார்கள். புல்வெட்டுவதற்க்கு என்கிறார்கள். அவர்களால் தைரியமாக அதற்கு பதிலளிக்க முடியாது.
என்னால் மட்டுமே இவர்களுக்கு தைரியமாக பதிலளிக்க முடியும். எப்படி என்றால் பிரதமர் ரணிலுடன் இணைந்து அழுத்கம முதல் திகனஇ அம்பாறை வரை பள்ளிவாசல்களை உடைத்து, அங்கு தொழுத மக்களை
கஷ்டப்படுத்தினீர்களே அப்போது எங்களை தற்பாதுகாத்து கொள்ள வாளை தவிர என்ன எங்களிடம் இருக்கிறது என கேட்கிறேன்.
இப்படி தைரியமாக கேட்க எந்த தலைவனுக்கும் தைரியமில்லை. அவர்களின் அட்டூழியங்களை நாங்கள் எதிர்கொள்ள வாளுமில்லாமல் எப்படி இருக்கமுடியும் ? எங்களிடம் வெடிபொருள் இருந்தால் சொல்லுங்கள். திகன கலவரத்தை பொலிஸ் திணைக்களத்தை கொண்டு நடத்திய கயவர்கள் நீங்கள் என தெரிவித்தேன்.
இங்கு முட்டாள்கள் போன்று ஹக்கீம் போன்றோர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நாங்கள் இஸ்லாத்திலா இருக்கிறோம் என சந்தேகிக்கும் அளவுக்கு அஞ்சி ஒடுங்கிப்போகி இருக்கிறார்கள்.
மற்றுமொருவர் இருக்கிறார் அவருடைய சொத்துகுவிப்பு, கடத்தல், மற்றும் வேறு பல விடயங்கள் இருக்கிறது அதை சர்வதேசமே நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. அவருடைய அமைச்சு முஸ்லிம் சமூகத்துக்கு தேவையான அமைச்சா? அது அரசியல் அனாதைகளுக்கு தவிசாளர் பதவி கொடுப்பதற்கும், வியாபாரம் செய்வதற்க்குமான அமைச்சு.
கடந்த காலத்தில் அவருடைய அமைச்சின் பிரிவு ஒன்றில் போதைவஸ்து கடத்தல் இடம்பெற்றது. அப்போது நான் அவரிடம் இந்த அமைச்சை ஏன் மீண்டும் மீண்டும் கேட்கிறாய், உன் பிரதேச மக்களின் அடிப்படை வசதிகளில் பாரிய பின்னடைவு இருக்கிறது அதனை நிவர்த்தி செய்யும் அமைச்சை ஏன் பெறவில்லை. அதனால் தான் உன்னை கடத்தல்காரன் என அடையாளப்படுத்துகிறார்கள் என்றேன்.
இப்போது அவரை கூடவே பயங்கரவாதி என்கிறார்கள்.அத்தனை குண்டுதாரிகளும் உன்னுள்ளையே இருந்திருக்கிறார்கள். அவர்கள் கூறுவது போன்று பயங்கரவாதியாக நீ இருந்துவிட கூடாது உன்னை பாதுகாக்க வேண்டும்.
ஆனால் செய்வதெல்லாம் செய்துவிட்டு ஒழிந்துகொள்ள முஸ்லிம் சமூகத்தை பயன்படுத்த வேண்டாம் பாராளுமன்றத்தில் றிஸாத்தின் கட்சிக்காரர்கள் கூறுகின்றார்கள் முஸ்லிம் சமுகத்துக்கு குரல்கொடுப்பதால் தான் இவ்வளவு சிக்கல் என்கிறார்கள்.
அதற்க்கு சிங்கள எம்.பி சொல்கிறார் எத்தனையோ முஸ்லிம் எம்பிக்கள் இருக்கிறார்கள் அவர்களை நாங்கள் சொல்கிறோமா இல்லையே என்கிறார்.
பூனை கண்களை மூடிக்கொண்டு உலகம் இருட்டியதாக சொல்வது போன்றே இருக்கிறது இவர்களின் கதை.
அமைச்சுப்பதவிக்கு பின்னால் கட்டுப்பட்டுக்கொண்டு முஸ்லிங்களை காட்டிக்கொடுக்கிறார்கள். முஸ்லிங்களாகிய நாங்கள் சொல்ல வேண்டும் இந்த அமைச்சு பதவியை தூக்கி வீசு என்று.
இந்த அமைச்சினால் இப்ராஹிம் ஹாஜிக்கு பித்தளை கொடுத்த கதையும் வருகிறது. நாட்டுக்கும் அதேபோல முஸ்லிங்கள் யாருக்கும் இந்த அமைச்சினால் நன்மையில்லை. சிங்கள மக்களும் சிங்கள அரசியல்வாதிகளும் சந்தேகத்துடன் நோக்குகிறார்கள் என்றால் உடனடியாக இராஜினாமா செய்துவிட்டு வெளியேற வேண்டும்.
அஸ்ரபிற்க்கு பின்னர் இவர்தான் மற்றைய அஸ்ரப் ஆக சில முகப்புத்தகங்களில் பிரச்சாரம் வேறு. எனவே ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு செய்த அநியாயங்கள் அவர்களுக்கே இப்போது திரும்பி வந்துள்ளது.
ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டார்.
பாறுக் ஷிஹான்