மினுவாங்கொடை வன்முறை ; 78 பேரில் 32 பேருக்கு பிணை!
வடமேல் மாகாணம், மினுவாங்கொடையில் இடம்பெற்ற வன்முறைகள் மிகத் திட்டமிடப்பட்டு சந்தர்ப்ப வாதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை மினுவாங்கொடை வன்முறைகள் குறித்த விசாரணைகளை மேற்பார்வை செய்யும் மேல் மாகாணத்தின் வடக்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உறுதிசெய்துள்ளார்.
மினுவாங்கொடை வன்முறையின் ஆரம்பம் ஒருவரை மையப்படுத்திய தனிப்பட்ட விவகாரம் ஒன்றில் ஆரம்பித்துள்ளதாகவும், அதன் பின்னர் ஒரு ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்து 10 நிமிடங்களிலேயே ஏனைய வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதேவேளை மினுவனங்கொடை சம்பவங்கள் தொடர்பில் கைதான 78 பேரில் 32 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சாதாரண சட்டத்தின் கீழ் மினுவாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த 32 பேரே இவ்வாரு விடுவிக்கப்பட்டுள்ளனர்.