யாழ்ப்பாணத்திற்கு ஏதிலிகளாக வந்த வெளிநாட்டு அகதிகளை திருப்பி அனுப்பியமை கண்டிக்கத்தக்கதும் மனவருத்தத்திற்கும் உரிய செயலாகும் என வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஏனைய நாடுகளில் தமிழ் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வரும் நிலையில் எம் நாட்டிலுள்ள தமிழ் மக்கள் அகதிகளின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டமையை ஏற்றுக்கொள்ளவே முடியாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“யாழ்ப்பாணத்திற்கு ஏதிலிகளாக வந்த வெளிநாட்டு அகதிகளை திருப்பி அனுப்பியமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
ஏனெனில், எமது நாட்டிலிருந்து அகதிகளாகச் சென்ற தமிழ் மக்கள் இந்தியா, அவுஸ்ரேலியா, ஐரோப்பிய நாடுகளென பல நாடுகளில் ஏதிலிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
அவர்களை அந்த நாட்டு அரசும் மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையையும் அமைத்துக்கொடுத்துள்ள நிலையில், நாம் இவ்வாறு செய்வது கண்டிக்கத்தக்க விடயம்.
அவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து தங்க வைக்கலாம். ஆனால் அவர்களை தங்க வேண்டாமெனக் கூறுவது குறிப்பாக தமிழ் மக்கள் அவ்வாறு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது” என மேலும் தெரிவித்துள்ளார்.