யாழில் காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை!

யாழில் காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை!

யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரின் பாவனையில் உள்ள காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

அத்தோடு வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வந்த காணி விடுவிப்புகள் தொடர்ச்சியாக இடம்பெறுமெனவும் காணி விடுவிப்பில் எந்தவித பிரச்சினையும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

பலாலியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) சைக்கிள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

“ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து, வலிகாமம் வடக்கில் 25 ஏக்கர் காணி விடுவிக்கப்படவிருந்த நிலையில், அது தற்போது தள்ளி போடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் சரி இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசத்தின் பாதுகாவலர்களான இராணுவத்தினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராது தமது கடமைகளை செவ்வன ஆற்றி வருகின்றனர்.

கடந்த காலங்களில் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு பொதுமக்களின் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் 25 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படுவதாக இருந்த நிலையில் குறித்த நிகழ்வு ஜனாதிபதியின் வருகை இரத்து செய்யப்பட்ட நிலையில் காணி விடுவிப்பு நிகழ்வும் ஒத்தி வைக்கப்பட்டது.

ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலின் பின்னர் நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சிலா போலி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறித்த காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய விடுவிக்கப்படும்.

யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரின் பாவனையில் உள்ள காணிகள் விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை. மக்களுடைய காணிகள் தொடர்ச்சியாக விடுவிப்பதற்கு இராணுவத்தினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Copyright © 7335 Mukadu · All rights reserved · designed by Speed IT net