ரிசாத்துக்கு எதிராக களமிறங்கும் தென்னிலங்கை அமைச்சர்!
அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பாதுகாக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்குமானால் எதிர்காலத்தில் தீர்க்கமானதொரு அரசியல் தீர்மானத்தை எடுக்க நேரிடும் என இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு நேற்றிரவு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
“ சுயாதீன விசாரணைக்கு இடமளித்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சுப் பதவியை துறக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருக்கின்றது. அந்த
நிலைப்பாட்டிலிருந்து நான் துளியளவும் மாறவில்லை.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதற்காக இதுவிடயத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை. எனினும், தெரிவுக்குழுவில் எவ்வாறான விடயங்கள்
முன்வைக்கப்படும் என்பதை ஆராய்வதற்காக காத்திருக்கின்றேன்.
யார் என்ன சொன்னாலும், கட்சி எந்தமுடிவை எடுத்தாலும் எனது மனசாட்சியின் பிரகாரமே வாக்களிப்பேன். அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக
இந்த விடயத்தை மூடிமறைக்ககூடாது. பிரச்சினைக்கு அது தீர்வாகவும் அமையாது.
எனவே, நீதியை நிலைநாட்டினால்தான் எதிர்காலத்தில் கத்தோலிக்க மக்களின் வாக்குகளைக்கூட பெறக்கூடியதாக இருக்கும். மாறாக இது விடயத்தில் அநீதி
இழைக்கப்படுமானால் எதிர்காலத்தில் தீர்க்கமானதொரு அரசியல் முடிவை எடுப்பேன்.’’ எனத் தெரிவித்துள்ளார்.