ஏமாற்றம் தந்த வடமாகாண அமைச்சரவை மாற்றம்.

00
வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போது மிகப்பெரிய ஒரு வரலாற்றுச் சாதனையைப் புரிந்த மனமகிழ்ச்சி தமிழ் மக்களிடம் இருந்தது. யுத்த வெற்றியில் திளைத்திருந்த அன்றைய அரசாங்கத்துக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை மிகச் சரியான வகையில் நிறைவேற்றிய திருப்தி தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. ஆயுதத்தால் அடக்கிய அரசாங்கததுக்கு வாக்கின் பலத்தை உணர்த்திய அலை ஓய்வதற்கிடையில் அமைச்சுப்பதவியைப் பெறுவதற்கான நுண் அரசியல் ஆரம்பமாகியது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளை தமிழ் அரசுக்கட்சி மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாகத் தொடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை தமிழ் அரசுக்கட்சி மறுத்தாலும் ஏனைய கட்சிகள் ஏற்கத்தயாராக இல்லை. நான்கு அமைச்சுப்பதவியைப் பெறுவதற்கான மரதன் நடைபெற்றது. தோழமைக் கட்சித் தலைவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். அன்று ஆரம்பமான அதிருப்தி இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சிகளும் பொது மக்களும் குறைகூறிய காலம் போய் அவர்களை மாற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் இடையிலான விரிசல் உச்சக்கட்டத்தை அடைந்த போது முதலமைச்சரை மாற்றுவதற்கான சதி உருவாகிறது என்ற கருத்து மேலோங்கியது. அந்தப் பிரச்சினை அடங்கியபோது அமைச்சர்களுக்கு எதிரான கருத்து முன்னிலை பெற்றது. வினைத்திறன் அற்ற அமைச்சர்களை மாற்றி அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோஷம் மேலெழுந்தது.

வடமாகாணசபைத் தேர்தல் 2013 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்றது. மாகாணசபைக் கட்டடம், அமைச்சர்கள் நியமனத்தில் ஏற்பட்ட இழுபறி காரணமாக ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்தார்கள். இரண்டரை வருடங்களில் அமைச்சரவை மற்றம் செய்யப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. இதனை மக்கள் மறந்துவிட்டார்கள். சக உறுப்பினர்கள் மனதில் வைத்திருந்து இப்போது ஞாபகப்படுத்துகிறார்கள். வடமாகாணசபையின் அமைச்சர்களை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கும் அணிக்கு வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் உரத்துக் குரல் கொடுக்கிறார். வடமாகாணசபையில் 30 உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். 16 உறுப்பினர்கள் அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்ற கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் கை எழுத்திட்டமையினால் அமைச்சர்களை மாற்ற வேண்டும் என அன்ரனி ஜெகநாதன் வாதாடுகிறார்.

யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த எவரும் அமைச்சராக இல்லை. தான் பிரதிநிதித்துவப்படுத்தும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி ஒன்று கிடைக்காத காரணத்தினால் மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என அன்ரனி ஜெகநாதன் கூறியுள்ளார்.

இதனால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்களை செய்து முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஜெகநாதன் கூறியுள்ளார். வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டப் பிரதிநிதிகளுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சு பதவிகள் வழங்கும் போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சு பதவியை வழங்காதது அநீதியானது.

அத்துடன் வடக்கு மாகாண சபையில் இருக்கும் தற்போதைய அமைச்சர்கள் மூலம் எதிர்பார்த்த அபிவிருத்தியை அடைய முடியாது. தற்போதுள்ள அமைச்சர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களின் அபிவிருத்திக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கி வருவதாகவும் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தியை புறந்தள்ளியுள்ளதாகவும் ஜெகநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடமாகாணசபையின் அமைச்சர்களை மற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒருவரை மட்டும் குறி வைக்காது நான்கு அமைச்சர்களையும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பெண்களுக்கு மதிப்புக்கொடுத்து அமைச்சுப்பதவி கொடுக்க வேண்டும் என்ற ஆதங்கம் பெண்களிடம் இருக்கிறது. பெண்களின் மனதில் உள்ள விருப்பம் வெளிவரவில்லை.

வடமாகாணசபை உறுப்பினர்களுக்கும் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது வடமாகாணசபையின் அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்ற கடிதத்தை தலைவர் இரா.சம்பந்தனிடம் அன்ரனி ஜெகநாதன் கையளித்தார். வடமாகாண முதலமைச்சர், அவைத்தலைவர், அமைச்சர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்ற கடிதத்தை வாங்கிய தலைவர், அமைச்சர்களை மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று பதிலளித்தார்.

வடமாகாணசபையில் சில குறைபாடுகள் இருக்கிறதென வெளியான விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட தலைவர், அமைச்சர்களின் செயற்பாடு திருப்திகரமாக இருக்கிறதெனத் தெரிவித்தார். முதலமைச்சர் மீதும், அமைச்சர்கள் மீதும் பிழை இல்லை.. 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுதான் இதற்குக் காரணம் என்றார். அரசியலமைப்பை மீறி முதலமைச்சரும் அமைச்சர்களும் செயற்பட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இரண்டரை வருடங்களில் அமைச்சர் பதவி கைவிட்டுப்போகும் எனப் பயந்தவர்கள் நிம்மதியடைந்தனர். அமைச்சராகலாம் என நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள்.
தமிழ் லீடர்

Copyright © 8582 Mukadu · All rights reserved · designed by Speed IT net