மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத கார் வழங்க அனுமதி மறுப்பு.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு குண்டு துளைக்காத கார் ஒன்றினை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை மறுத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தனக்கு குண்டு துளைக்காத கார் ஒன்றினை வழங்க வேண்டும் என தன்னிடம் கோரியுள்ளதாகவும் இதனால் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னை விட அதிகமான குண்டுதுளைக்காத வாகனங்கள் மகிந்த ராஜபக்சவிடம் உள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்று அவர் வீடு செல்லும் போது இரண்டு குண்டு துளைக்காத வாகனங்களை கொண்டு சென்றிருந்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி அவர் பிரதமராக பதவியேற்ற போது மற்றுமொரு குண்டு துளைக்காத கார் வழங்கப்பட்டது. எனவே தற்போதைய நிலையில் அவருக்கு மற்றுமொரு குண்டுதுளைக்காத கார் வழங்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மற்றுமொரு குண்டுதுளைக்காத கார் வழங்கப்பட வேண்டியதில்லை. ஏற்கனவே மூன்று குண்டுதுளைக்காத வாகனங்கள் அவரிடம் இருக்கின்றன.
ஜனாதிபதியிடமோ பிரதமரிடமோ இல்லாத வாகனங்கள் அவரிடம் உள்ளன. இந்த நாட்டில் யார் ஜனாதிபதி என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவருக்கு குண்டுதுளைக்காத புதிய கார் வழங்கத் தேவையில்லை என்று தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் அதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரமும் நிராகரிக்கப்பட்டது.