திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை!
திருப்பதி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தி நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய நகராட்சி முடிவு செய்து அதனை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
இதன்படி 51 மைக்ரானிற்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், குடிநீர் போத்தல்கள், பிளாஸ்டிக் கோப்பைகள் உள்ளிட்ட அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.
குறித்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணி மற்றும் சணலைப் பயன்படுத்தி செய்யப்படும் கை பைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் பால் பொதிகள், ஒரு லீட்டருக்கு மேற்பட்ட குடிநீர் போத்தல்கள், அத்தியாவசிய தேவைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றையும் பயன்படுத்த திருப்பதி நகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களும் குறித்த செயற்பாட்டுக்கு ஆதரவினை தெரிவிக்கும் வகையில் தங்களது வீட்டிலுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பொது இடத்தில் கொண்டு வந்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.