மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கின் மனைவியும் கைது!
ஊழல் மோசடி குற்றச்சாட்டில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கின் மனைவி ரொஸ்மா மன்சூர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மலேசிய குற்றத்தடுப்பு ஆணைக்குழுவால் இன்று (புதன்கிழமை) சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், அதன் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
66 வயதான ரொஸ்மா மன்சூரை நாளை கோலாலம்பூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணமோசடி மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக அவர்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
மலேசிய அபிவிருத்தி வங்கியின் 4.5 பில்லியன் டொலர் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும், அரச முதலீடுகளை துஷ்பிரயோகம் செய்ததாகவும் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அவரது மனைவியிடம் கடந்த செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி 13 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இன்றும் விசாரிக்கப்பட்டது.
இதேவேளை, முன்னாள் பிரதமர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகும் பட்சத்தில் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களுக்கும் சுமார் 20 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடுமென அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.