சிங்கள தலைவர்களையோ தமிழ் தலைமைகளையோ நம்பி எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை. – காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவிப்பு
சிங்கள தலைவர்களையோ தமிழ் தலைமைகளையோ நம்பி எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை என காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
வவுனியா வாடி வீட்டில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது ஊடக சந்திப்பு இடம்பெற்ற போது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள்,
நாம் எமது விடயம் தொடர்பாக பல தூதுவராலயங்களுடன் தொடர்புகொண்டிருக்கின்றோம். எமது நிலையை விளங்கப்படுத்தியிருக்கின்றோம். அவர்களும் கண்ணீர் விட்டு அழுதிருக்கின்றார்கள்.
எனினும் அவர்கள் எல்லாம் முடிந்த பின்னர் காணாமல் போனோருக்கான அலுவலகத்தினையும் ஒருமுறை முயற்சித்து பாருங்கள் என தெரிவிக்கின்றனர்.
நாம் எப்படி கூறினாலும் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை. அவாகளுக்கும் கூட எவ்வாறு செய்வது என்று தெரியவில்லை. எங்களது போராட்டம் ஆரம்பித்த முதல் எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்பார்ப்பது என்னவோ உண்மைதான்.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எமக்கு உண்மையாக செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு இருந்தால் அவர்களுக்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தன.
குறிப்பாக அரசாங்கத்திற்கு இரண்டு வருட காலத்தை கொடுக்காது எதிர்ப்பை காட்டியிருக்கலாம். இதற்கு அவர்கள் கூறுகிறார்கள் நாங்கள் கொடுக்க வேண்டாம் என கூறினால் கூட அவர்கள் அதனை கொடுக்கத்தான் போகின்றார்கள் என்று சொல்கின்றனர்.
அதனைவிடுத்து அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கி அதனை ஆதரித்தது மிகப்பெரிய துரோகம்.
அதைவிட பாராளுமன்றத்தில் பாதீட்டு வாக்கெடுப்பின் போதும் சில சட்ட மூல வாக்கெடுப்பின் போதெல்லாம் எமது பிரச்சனையை முன்னிறுத்தி பேரம்பேசி இருந்திருக்கலாம். அதை எல்லாம் செய்யத்தவறியிருக்கிறார்கள் ஏன் என்றால் அவர்களது உறவுகள் எவரும் காணாமல் போகவில்லை.
அவர்கள் சுக போகத்தை அனுபவித்துககொண்டிருக்கிறார்கள். இனி தேர்தல் வரப்போகின்றது அவர்கள் இதைதான் இன்னும் கதைப்பார்கள்.
அவர்கள் கூறுவதை நம்பும் மக்கள் இருக்கும் வரை வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கப்போகின்றது.
மக்களுக்கு எப்பொழுது விழிப்பு வருமோ அப்பொழுது தான் எமக்கு விடிவு.
கடந்த காலத்தில் மைத்திரிபால சிறிசேனவை எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிறுத்தி இவருக்கு வாக்களித்தால் எமக்கான தீர்வு கிடைக்கும் என்றார்கள்.
எமக்கு தெரியும் மைத்திரிபால சிறிசேன பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் போதுதான் எமது பிள்ளைகள் காணாமல் போயிருந்தார்கள். என்றாலும் கூட மைத்திரிபால சிறிசேனவிற்கு உள்ளுர விரும்பம் இல்லாமல் ஜனாதிபதியின் வற்புறுத்தலின் பேரில் செய்திருக்கலாம், சிலவேளைகளில் எமது உறவுகளை வைத்திருக்கும் இடம் கூட அவருக்கு தெரிந்திருக்கும், இவர் மூலம் எங்களிற்கு தீர்வு கிடைக்கலாம் என்ற நப்பாசையே.
ஏன் என்றால் பிள்ளைகளை இழந்த எமக்கு சின்ன ஒரு துரும்பு கிடைத்தாலும் கூட அதனை பற்றிக்கொள்வது இயல்பு என்ற ரீதியில் அதனை பற்றிக்கொண்டு அவர்களுக்கு வாக்களித்தோம்.
ஆனால் அவர் தனது சுயரூபத்தை காட்டிவிட்டார்.
அதேபோல் எமது பிரதம மந்திரியும் தேர்தலுக்கு முன் வந்து எமது பிள்ளைகளை மீட்டுத்தருவேன் என்று தெரிவித்து விட்டு பின்னர் தேர்தல் முடிந்த பின்னர் தைப்பொங்கலன்று பலாலியில் அவர்கள் எல்லோரும் இறந்துவிட்டார்கள், வெளிநாடு சென்றுவிட்டார்கள் என்று கூறியிருந்ததுடன், கடந்த வருடம் வந்து மறப்போம் மன்னிப்போம் என்றும் சுறியிருந்தார்.
எல்லோருமே தங்களது குனத்தை காட்டிவிட்டார்கள். இனி இலங்கை அரசிடம் இருந்தே தீர்வு கிடைக்காது எனும் போது இனி எந்த சிங்கள தலைமையிடம் இருந்தோ அல்லது எமது தமிழ் தலைமைகள்தான் ஜனாதிபதியாக வந்தாலும் கூட எமக்கு தீர்வு கிடைக்காது. எமக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒன்றின் மூலமே எமக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.