ரிஷாட்க்கு எதிரான நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஒரு வாரகால அவகாசம்!
ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு வாரகால அவகாசம் வழங்குவதாக பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற போராட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த குற்றச்சாட்டுக்கு பின்னணியில் ஹிஸ்புல்லா போன்றவர்கள் இருக்கின்றனர். மேலும் பலர் இருக்கின்றனர் ஆனாலும் அவர்களின் பெயர்களை கூறி இதற்கான தீர்வுகள் கிடைக்கப்போவதில்லை.
ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பிரதமருக்கு 1 வாரம் கால அவகாசம் வழங்குகின்றேன்.
இது ரிஷாட் பதியுதீனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. நாட்டில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே.
இந்த போராட்டத்தினை நடத்த எமக்கு வழிவிடுங்கள். இந்த செயற்பாடுகளுக்கு மதகுருக்கள் மூலமே தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும்.
நாட்டில் வேறு விதமான குழப்பங்களை ஏற்படுத்தி இந்த போராட்டத்தினை வேறு திசையில் மாற்றினால் இதற்கான பிரதிபலன் கிடைக்காமற் போய்விடும்.
மேலும் இந்த நாட்டில் மாறு வேடத்தில் சிலர் இருக்க கூடும் என்பதனால் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து. பாதுகாப்பு தரப்பினர் அவர்களது கடமைகளை செய்ய இடமளிக்க வேண்டும். ” என கூறினார்.