சாய்ந்தமருது தாக்குதல்தாரிகளின் DNA அறிக்கை குறித்து முக்கிய தகவல்!

கல்முனை – சாய்ந்தமருது தற்கொலைதாரிகளின் உடற்பாகங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளின் மரபணு பரிசோதனை அறிக்கை அடுத்த வாரம் வௌியிடப்படவுள்ளது.

அதற்கமைய குறித்த மரபணு பரிசோதனை அறிக்கை நீதிமன்றம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

குறித்த மாதிரிகள் நேற்று முன்தினம் சட்ட வைத்திய அதிகாரிகளூடாக அரச இரசாயனத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய சஹரானின் உறவினர்களை இந்த மரபணு பரிசோதனை அறிக்கையினூடாக அறிந்துகொள்ள முடியும் என அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட சில பயங்கரவாதிகளினதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களினதும் சடலங்கள் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) தோண்டி எடுக்கப்பட்டன.

இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட சந்தேகநபர்களின் உடற்பாகங்கள் மரபணு பரிசோதனைகளுக்காக இரசாயன பகுப்பாய்வு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் அவற்றில் நான்கு சந்தேகநபர்களின் உடற்பாகங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால், சடலத்தின் உடற்பாகங்கள் சில மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி கல்முனை சாய்ந்தமருது சுனாமி கிராமத்தில் உள்ள வீடொன்றில்இ பாதுகாப்புத் தரப்பினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சமர் இடம்பெற்றது.

இதன்போது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் சஹரானின் உறவினர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 3181 Mukadu · All rights reserved · designed by Speed IT net