மோடிக்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு.

மோடிக்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு சுமார் 7 அல்லது 8 நிமிடங்கள் அளவிலேயே இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் போது இரண்டாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றமைக்காக நரேந்திர மோடிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சுதந்திரத்திற்கு பின்னரான அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு எதிராகவே அமைந்துள்ளதை சுட்டிக்காட்டிய கூட்டமைப்பு, இலங்கையில் தமிழர்கள் சம அந்தஸ்தில் வாழ இந்தியா ஆகக்கூடிய கரிசனை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இந்த கோரிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கையில், இது தொடர்பில் ஏற்கனவேயும் என்னிடம் வலியுறுத்தியுள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியாவிற்கு விஜயம் செய்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபடுமாறு சுட்டிக்காட்டிய அவர், கூட்டமைப்பின் பயண ஏற்பாட்டை உடனடியாக மேற்கொள்ளும்படி அங்கிருந்த இந்திய தூதர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், பலாலி விமான நிலையத்தில் சிறிய விமானங்களையாவது சேவையில் ஈடுபடுத்தலாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இது குறித்து கவனம் செலுத்துமாறு தூதரக அதிகாரிகளிடம் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Copyright © 1136 Mukadu · All rights reserved · designed by Speed IT net