ஹிஸ்புல்லாவிற்கு எதிராக தவராசா முறைப்பாடு!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆகியோர் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து முறைப்பாடுகளை செய்வதற்கு பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தப் பிரிவிலேயே ஹிஸ்புல்லாவிற்கு எதிரான முறைப்பாட்டை தவராசா பதிவு செய்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தெரிவித்த வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, “முகநூலில் காணப்படும் ஹிஸ்புல்லாவின் உரையின் காணொளியொன்றில், மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த ஓர் வழக்கு தொடர்பாக தான் நீதிபதியை மாற்றி தனக்கு சாதகமாக நீதிபதியைக்கொண்டு தீர்ப்பை எழுத வைத்ததாக கூறியிருக்கிறார்.

இது இலங்கையின் நீதித்துறையையும் அதன் சுதந்திரத்தையும் அதன் கௌரவத்தையும் கேள்விக்குறியாக்கும் ஒரு விடயம்.

அதனால் இது தொடர்பாக உடனடியாக விசாரித்து தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டதோடு, ஹிஸ்புல்லா தனது அரசியல் பதவிகளை பாவித்து அல்லது துஸ்பிரயோகம் செய்து நீதித்துறை மீதும் சட்டம் ஒழுங்குத்துறை மீதும் வேறு ஏதாவது அழுத்தங்களை இதேபோல் பிரயோகித்திருக்கின்றாரா என்பதை ஆராயும்படியும் முறைப்பாட்டில் கேட்டுக்கொண்டேன்.

மேலும் இதேபோன்று எழுத்திலான முறைப்பாடு ஒன்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டுள்ளதோடு, ஹிஸ்புல்லாவின் உரையின் காணொளிப் பிரதிகள் பொலிஸ் தலைமைக் காரியாலயத்திற்கும் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கும் வழங்கப்பட்டுள்ளது” என்றும் தவசராசா தெரிவித்துள்ளார்.

Copyright © 8779 Mukadu · All rights reserved · designed by Speed IT net