யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான இலவச தொழிற்பயிற்சி சி.வி விக்னேஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனமான புதிய வாழ்வு நிறுவனம் இன்று வடமாகாண முன்னால் முதல்வர் சி.வி விக்னேஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது.
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் குறித்த தொழில் பயிற்சி நிறுவனம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண முன்னால் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி விக்னேஸ்வரன் கலந்து கொண்டு நாடா வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்வில் உரையாற்றிய அவர் குறிப்பிடுகையில்,
முப்பது வருடமாக எமது நாட்டில் இடம்பெற்ற தொடர் யுத்தம் காரணமாக சாதாரணமக்களின் வாழ்க்கை தரத்தில் மிகப்பெரிய தாக்கம் செலுத்தியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் சவால்களிற்கு முகம் கொடுக்கும் வகையில் நவீன வசதி வாய்ப்புக்களை அரசின் ஊடாகவும், வெளிநாடுகளின் உதவிகளின் ஊடாகவும் பெற்று பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ள போதிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் சாதாரண மக்கள் எதுவித உதவிகளோ, அனுசரணைகளோ அற்ற நிலையில் மூன்று வேளை உணவுக்குக்கூட சிரமப்படுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் அவதானிக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.