புதிய தமிழ்நாதம் பத்திரிகை கிளிநொச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

புதிய தமிழ்நாதம் பத்திரிகை கிளிநொச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

புதிய தமிழ்நாதம் பத்திரிகை நேற்று கிளிநொச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.. குறித்த நிகழ்வு பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த பத்திரிகையின் முதல் பிரதி நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக மாவை சேனாதிராஜா கலந்து கொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், எஸ்.சிறிதரன், முன்னால் வடமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, வை.தவநாதன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிடுகையில்,

இன்று இளம் பத்திரிகை துறையினர் பொறுப்புக்களை ஏற்று வருகின்றனர். அவர்கள் நடுநிலையாக செய்திகளை எழுத வேண்டும்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பல்வேறு பின்னடைவுகளை நாம் சந்தித்துள்ளோம். யுத்தகாலத்தில் முன்னிலையில் இருந்த எமது மாணவர்களின் கல்வி நிலைமை இன்று மிகவும் பின்வாங்கி காணப்படுகின்றது.

மாணவர்கள் கல்விக்கு பதிலாக வேறு விடயங்களை நோக்கி நகர்கின்றனர். இன்று இளைஞர்கள் மத்தியில் அதிகளவு போதைப்பொருள் பாவணை காணப்படுகின்றது. இதேவேளை இளைஞர்கள் வாள்வெட்டுக்குழுக்களாக செல்கின்றனர்.

எமது கல்வி துறையில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். 65 வீதமானோர் பல்கலைக்கழகங்களில் கலைப்பிரிவிலேயே செல்கின்றனர்.

அதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட ஏனைய துறைகளிற்குள் மாணவர்கள் செல்லும் வகையில் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று பத்திரிகை மாத்திரமல்ல, இலத்திரனியல் துறையில் சிறுவர்களும் உள்ளீர்க்கப்படுகின்றனர். ஊடக துறையாக சிறுவர்களும் கையாளக்கூடிய வகையில் உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நாாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்து தெரிவிக்கையில்,

இன்னும் நான்கு மாதத்தில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை சந்திக்க இருக்கின்றோம் நாம் ஜனாதிபதி பிரதமர் எமக்கு அரசியல் தீர்விற்கு உதவுவார்கள் என்று நம்பி இருந்தோம் ஆனால் நான்கு ஆண்டுகளை கடந்துவிட்ட போதும் எதுவும் நடக்கவில்லை ஜனதிபதி தேர்தல் ஒன்றை எதிர்நோக்க இருக்கின்றோம் அதற்காக மக்கள் வரிப்பணத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற சமுர்த்தி கம்பரேலிய போன்ற திட்டங்களை சிலர் காவித் திரிகின்றார்கள்.

சமஸ்டி கேட்டவர்கள் இபொழுது சமுர்த்தி கேட்டு திரிகின்றார்கள் அதனை விட முன்னைய அரசாங்கத்தோடு இணைந்து இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்த டக்லஸ் தேவானதா போன்றவர்களை விமர்சித்தவர்கள் இன்று அதனையே செய்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு தேர்தல் ஒன்று நெருங்கும் நிலையில் கம்பெரலிய, சமுர்த்தி போன்றவற்றை மக்களிற்கு அள்ளி தெளிப்பதாகவும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார். இதுவரை நம்பி அழைத்து பதவியில் அமர்த்திய ஜனாதிபதியோ பிரதமரோ ஒன்றும் செய்யாத நிலையில், தொடர்ந்தும் அவர்களிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கி வந்தமை தொடர்பிலும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடதக்கதாகும்.

பத்திரிகைகள் நடுநிலையாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுத வேண்டும். சில பத்திரிகை ஊடகங்கள் அரசியல் கட்சிகளிற்கு ஆதரவாக செயற்படுகின்றமையை காண முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.

Copyright © 7577 Mukadu · All rights reserved · designed by Speed IT net