எமது மாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் வாள் வெட்டு என்ற வன்முறைப் போக்கினை எதிர்காலத்தில் இல்லாமற்செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிளிநொச்சியில், புதிய தமிழ்நாதம் பத்திரிகையை வெளியிட்டுவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில்,
“இன்று இளம் பத்திரிகைத் துறையினர் பொறுப்புக்களை ஏற்று வருகின்றனர். அவர்கள் நடுநிலையாக செய்திகளை எழுத வேண்டும்.
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பல்வேறு பின்னடைவுகளை நாம் சந்தித்துள்ளோம். யுத்த காலத்தில் முன்னிலையில் இருந்த எமது மாணவர்களின் கல்வி நிலைமை இன்று மிகவும் பின்தங்கியுள்ளது. மாணவர்கள் கல்விக்குப் பதிலாக வேறு விடயங்களை நோக்கி நகர்கின்றனர்.
இன்று இளைஞர்கள் மத்தியில் அதிகளவு போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது. இதேவேளை இளைஞர்கள் வாள் வெட்டுக் குழுக்களாக செயற்படுகின்றனர்.
இதனிடையே, எமது கல்வி துறையில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். 65 வீதமானோர் பல்கலைக்கழகங்களுக்கு கலைப் பிரிவிலேயே செல்கின்றனர்.
அதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட ஏனைய துறைகளுக்குள் மாணவர்கள் செல்லும் வகையில் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என அவர் தெரிவித்தார்.