கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் நுவரெலியாவிலுள்ள முகாமில் பயிற்சிப் பெற்றவரென குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதலை நடத்தியவர், 2014ஆம் ஆண்டிலிருந்து தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பில் இணைந்து செயற்பட்டமை தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பயங்கரவாதி உட்பட மேலும் சிலர் எந்தேரமுல்ல மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வந்துள்ளனரென்றும் இவர்கள் நுவரெலியாவில் அமைந்துள்ள முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதிமன்றத்தின் பதில் நீதவான், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார்.