அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் விஜய் ஆண்டனி, தன்னுடைய வீட்டிற்கு எதிரே இருக்கும் ஆஷிமா நர்வாலை தினமும் பார்த்து விட்டுதான் செல்வார். இருவருக்குள்ளும் ஒரு நட்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், பாதி உடல் எரிந்த நிலையில் ஒரு சடலம் போலீசுக்கு கிடைக்கிறது. இதை உயர் அதிகாரியான அர்ஜூன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். விசாரணையில் இறந்த நபர் ஆந்திராவில் இருக்க கூடிய அமைச்சரின் தம்பி என்று தெரிய வருகிறது.
மேலும் இறந்த நபர், ஆஷிமாவிற்கு நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்திருப்பதால், இந்த கொலையை ஆஷிமாவும் அவரது தாய் சீதாவும் சேர்ந்துதான் செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் அவர்களை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
இந்த கொலைக்கு எதிர் வீட்டில் இருக்கும் விஜய் ஆண்டனி உதவியிருக்க கூடும் என்றும் சந்தேகிக்கிறார். விஜய் ஆண்டனியை பற்றி விசாரிக்கும் போது, ஆந்திரா போலீஸில் முன்னாள் அதிகாரியாக இருந்தவர் என்று தெரிந்துக் கொள்கிறார் அர்ஜூன்.
இறுதியில் அந்த கொலையை செய்தவர் யார் என்று அர்ஜூன் கண்டுபிடித்தாரா? ஆஷிமாவிற்கும் இறந்தவருக்கும் என்ன சம்பந்தம்? விஜய் ஆண்டனி ஆந்திரா போலீஸில் இருந்து வெளியே வந்ததற்கு காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜய் ஆண்டனி இறுக்கமான முகத்துடன் படம் முழுக்க வலம் வருகிறார். கடைசி வரை முகத்தில் மர்மம் இருப்பதை உணர்த்தி நடித்திருக்கிறார். மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் அர்ஜூன்.
கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மற்ற படங்களில் நடிக்கும் நாயகி போல் இல்லாமல் இப்படத்தில் ஆஷிமாவிற்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உணர்ந்து நடிப்பில் பளிச்சிடுகிறார். தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சீதா.
ஒரு கொலை, அதன் பின்னணியில் நடக்கும் சம்பவம் என கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ்.
இப்படத்தை பார்க்கும் போது, ஏற்கனவே வெளியான சத்யராஜ் நடித்த படத்தின் சாயலாகவும், கமலின் பாபநாசம் சாயலாகவும் தோன்றுகிறது.
விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் படத்திற்கு ஒட்டவில்லை. ஆனால், பின்னணி இசையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். முகேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கொலைகாரன்’ சுமாரானவன்.