நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி குறித்த மாகாணங்களுக்குள் உள்ளடங்குகின்ற 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் குருணாகல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற் பிரதேசங்கள்
திருகோணமலை கடற்பரப்பிலிருந்து புத்தளம் வழியாக காங்கேசன்துறை மற்றும் அதனை அண்மித்த கடற்பரப்புகளிலும், மாத்தறை தொடக்கம் மட்டக்களப்பு வழியாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மழை வீழ்ச்சி
மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லி மீற்றரை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கொழும்பு – புறக்கோட்டையில் 41.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
அதிக காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாதத்தில் மாத்திரம் அதிக காற்றினால் கொழும்பில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கிணங்க கொழும்பில் 267 குடும்பங்களைச் சேர்ந்த 823 பேரும், கம்பஹாவில் 151 குடும்பங்களைச் சேர்ந்த 649 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவை தவிர கேகாலை, புத்தளம், குருணாகல், வவுனியா, யாழ்ப்பாணம், நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.