ஜோன் ஜொரஸின் புகழ் பெற்ற கடிதம்
பள்ளிகளின் தொடக்க நாளில் வாசிப்பு
பிரான்ஸில் பொதுமுடக்கத்துக்கு மத்தியில் சுமார் 12 மில்லியன் மாணவர்கள் நேற்றுமுதல் பாடசாலைகளுக்கு திரும்பியுள்ளனர்.
காலையில் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் வீட்டுக்கு வெளியே செல்வதற்கான அனுமதிப் படிவங்களை பூர்த்திசெய்த பின்னரே பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லவேண்டி இருந்தது. அதற்கான படிவங்களை அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இரண்டு வார கால விடுமுறைக்குப் பின்னர் நேற்று பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமானபோது ஆசிரியர் சாமுவல் பட்டிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் பட்டியின் கல்லூரிக்கு அருகே ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சரும் மாணவர்களோடு இணைந்து மௌன அஞ்சலி செலுத்தினர்.
ஆசிரியத் தொழிலின் மகத்துவத்தையும் பொறுப்பையும் கல்வியின் நோக்கங்களையும் விவரித்து பிரான்ஸின் மூத்த சோசலிச பிரபலங்களில் ஒருவரும் தத்துவாசிரியருமாகிய ஜோன் ஜொரஸ் என்பவர் வரைந்த வரலாற்றுப்புகழ் மிக்க கடிதம் நேற்று பல பாடசாலைகளில் வாசிக்கப்பட்டது.
பிரெஞ்சு சோசலிசத்தின் ஒரு முக்கிய அடையாளமாகத் திகழ்பவர் ஜோன் ஜொரஸ் (Jean Jaurès).
பிரான்ஸின் துளூஸ் (Toulouse) பிராந்தியத்தில் வெளியாகிய “La Dépêche du Midi” பத்திரிகையில் அதன் பத்தி எழுத்தாளராக விளங்கிய சமயத்தில் ஜோன் ஜொரஸ் எழுதி ஜனவரி 15, 1888 இல் வெளியாகிய கடிதமே பள்ளிகளில் படிக்கப்பட்டது.
“குழந்தைகளின் அறிவையும் ஆன்மாவையும் உங்களின் கைகளில் பற்றி வைத்திருக்கின்ற நீங்களே எங்கள் தாய் நாட்டின் பொறுப்பாளிகள்…” என்று தொடங்கி ஆசிரியத்துவத்தை பெருமைப்படுத்தியும் கல்வி, அதை போதிக்க வேண்டிய முறைமைகள் பற்றியும் அந்த நீண்ட கடிதத்தில் விவரித்து எழுதியவர் ஜோன் ஜொரஸ்.
” உங்கள் கைகளில் உள்ள குழந்தை மனப்பாடம் செய்யும் ஒரு இயந்திரமல்ல. அந்தக் குழந்தை ஒரு கடிதத்தை எழுதவோ வாசிக்கவோ அல்லது தெரு மூலையில் உள்ள அறிவிப்புப் பலகையைப் படிக்கவோ தெரிந்து கொண்டால் போதுமானது என நினைத்துவிடாதீர்கள்…
” .. அவர்கள் பிரெஞ்சுக் குடிமக்கள்..நிச்சயம் பிரான்ஸை தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதன் வரலாற்றை, புவியியலை, அதன் உடலை ஆன்மாவை குழந்தைகள் அறிந்துகொள்ள வேண்டும்…”
.. ஒரு குடிமகனாக இருப்பதற்கு சுதந்திரமான ஜனநாயகம் என்றால் என்ன, ஆட்சியாளர்களால் குடிமக்கள் மீது பிரயோகிக்கப்படக்கூடிய இறையாண்மைகள் எவை என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.”
… “இறுதியாக அவர்கள் ஒரு மனிதனாக இருக்க வேண்டும். மனித எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும்.பல விதமான சுயநலன்கள் உட்பட எல்லா துன்பங்களினதும் மூலம் என்ன என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். எங்கள் பெருமை அல்லது உயர்வுக்கான உண்மையான கொள்கை எது என்பதையும் சொல்லிக்கொடுங்கள்… ”
கல்வி போதனை தொடர்பாக அந்த நீண்ட கடிதத்தில் ஜோன் ஜொரஸ் கூறியிருக்கும் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய சில வார்த்தைகள் இவை.
ஒரு தத்துவப் பேராசிரியராக இருந்து தனது 29 ஆவது வயதில் அரசியல்வாதியாக மாறிய அவர் பிரெஞ்சு சோசலிசத்தின் பிதாமகனாக வர்ணிக்கப்படுகிறார்.
பிரான்ஸில் திருச்சபையில் இருந்து அரசாட்சியை விலக்கி வைப்பதற்கு ஆதரவாகப் போராடியவர்களில் முக்கியமானவர் ஜோன் ஜொரஸ். அவரது அந்தப் போராட்டமே 1905 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து திருச்சபைகளைத் தள்ளி வைக்கும் பிரிவினைச் சட்டம் உருவாக வழிவகுத்தது என்று சொல்லப்படுகிறது.
முதலாம் உலகப் போர் ஆரம்பமான வேளை சோசலிசவாதிகளிடையே ஏற்பட்ட பிளவுகள், பேதங்களால் ஒதுக்கப்பட்ட ஜோன் ஜொரஸ், 1914 ஜூலை 31 ஆம் திகதி வலதுசாரி இளைஞர் ஒருவரால் பாரிஸ் நகர அருந்தகம் ஒன்றில் வைத்து தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
(படம் :ஜோன் ஜொரஸின் படத்துடன் கூடிய அவரது கடிதம் வெளியாகிய 1888ஆம் ஆண்டு பத்திரிகைப் பிரதி ஆவணம்)
பாரிஸ். – குமாரதாஸன்
03-11-2020