சுவீடனில் 1500 ஆண்டுகள் பழைமையான வாள் கண்டெடுப்பு!
சுவீடனில் உள்ள விடோஸ்டர்ன் குளம் எனும் நீர்நிலையில் இருந்து சிறுமி ஒருவர் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானதாக கருதப்படும் வாள் ஒன்றை கண்டெடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சுற்றுலா சென்றிருந்த 8 வயதான சாகா வனெசெக் என்ற சிறுமியே இந்த வாளை கண்டெடுத்துள்ளார்.
இந்த வாள் போர் வீரர்களாகவும், கடலோடிகளாகவும், வணிகர்களாகவும் வாழ்ந்த வைக்கிங்குகளின் காலத்திற்கும் முன்னயதாக இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வாள் முன்னதாக சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், சுவீடன் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் அது 1500 ஆண்டுகள் பழைமையானது என்று நம்புகின்றனர்.
வறட்சி காரணமாக குளத்தின் நீர்மட்டம் தற்போது வெகுவாக வற்றியுள்ள நிலையில், சிறுமி சாகா விளையாடிக் கொண்டிருந்த போது இந்த வாளை கண்டெடுத்துள்ளார்.
இதுபற்றி சுவீடன் தேசிய வானொலியில் பேசிய சாகா,
“நான் தண்ணீரில் ஏதோ இருப்பதை உணர்ந்தேன், அதை உயர்த்திப் பார்த்தேன், அதில் கைப்பிடி ஒன்று இருந்தது. அது ஒரு வாள் போன்று இருப்பதாக எனது அப்பா கூறினார்” என்று கூறினார்.