இந்தோனேசியாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு! அதிகமானோரை காணவில்லை!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1571 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மண்ணுக்குள் புதையுண்டிருக்கலாமென அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், குடிநீருக்கு மாத்திரம் அங்கு பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்பு காரணமாக பல துயரங்களை எதிர்கொண்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பொருட்டு இந்தோனேசிய அரசாங்கமும், சர்வதேச நாடுகளும் தமது உதவிகளை வழங்கி வருகின்றன.
பலு பிரதேசத்தில் 1200 பேர் உயிரிழந்தனர்.
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பல வீதிகள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளன.
மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் என்பன இன்னமும் பல பகுதிகளில் முழுமையாக வழங்கப்படவில்லை. இந்தநிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உயிர்பிழைந்த மக்கள் இன்னமும் அச்சத்துடனேயே வாழ்கின்றனர்.
பலுவில் சில வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு பணிகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் வீதிகளில் தமது விற்பனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளுக்கு மத்தியில் இன்னமும் சடலங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மீட்புப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.