அம்பாந்தோட்டையில் விரைவில் சீனாவின் இராணுவத் தளம்!
சீனா, கடன் இராஜதந்திரத்தை தனது பூகோள செல்வாக்கை விரிவுபடுத்திக்கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்கிறது என்றும், அம்பாந்தோட்டை துறைமுகம், பீஜிங்கின் வளர்ந்து வரும் நீல நீர் கடற்படையின் முன்னரங்க இராணுவத்தளமாக விரைவில் மாற்றமடையும் என்றும் அமெரிக்காவின் உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் உயர்மட்ட சிந்தனைக் குழாமான, ஹட்சன் நிறுவகத்தில், வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக கடந்த வியாழக்கிழமை நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-
“ஆசியா, ஆபிரிக்கா, தொடக்கம், ஐரோப்பா வரை மட்டுமன்றி, இலத்தீன் அமெரிக்கா வரையான நாடுகளுக்கு, சீனா நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை உட்கட்டமைப்பு கடன்களாக வழங்கியுள்ளது. அந்தக் கடன் நிபந்தனைகள் பீஜிங்கிற்கு சிறந்ததாகவும் பயனளிப்பதாகவும் உள்ளது.
இலங்கையைப் பற்றிக் கேளுங்கள். வணிகப் பெறுமானம் பற்றிய சந்தேகம் உள்ள துறைமுகத்தை அமைப்பதற்காக சீன அரசு, நிறுவனங்களிடம் இருந்து பாரிய கடனைப் பெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அந்த நாட்டினால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் துறைமுகத்தை சீனாவிடம் வழங்கும்படி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தது.
சீனாவின் வளர்ந்து வரும், நீல நீர் கடற்படையின் முன்னரங்க இராணுவத் தளமாக அம்பாந்தோட்டை துறைமுகம் விரைவில் மாறக்கூடும்.
சீனாவின் மூலோபாய நோக்கங்களுக்கு இடமளிப்பதாக வாக்குறுதி அளிக்கும் கட்சிகள், வேட்பாளர்களுக்கு நேரடியாக ஆதரவளித்து, சில நாடுகளின் அரசியலை பீஜிங் சீர்குலைக்கிறது” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.