அவுஸ்திரேலியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் அடிலெய்ட் விளையாட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடுவதற்கு போதிய அனுபவமில்லை என தென் ஆபிரிக்க வீரர்கள் தெரிவிப்பதுடன், அவ்வாறு விளையாடினால் அது தங்களது அணிக்கு பாதிப்பாக அமையும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனினும், அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்காவை விளையாட வைப்பதில் கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா தொடர்ந்தும் முயற்சிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த கோடைக்காலம் ஆரம்பமானதும் அவுஸ்திரேலியாவுக்கு நான்கு நாடுகள் கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ளன. இவ் விஜயங்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
நியூஸிலாந்துக்கு எதிரான சப்பல் – ஹட்லி கிண்ணத்திற்கான 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர், ஜனவரியிலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2017 ஜனவரியிலும் நடைபெறவுள்ளன.
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் 2017 பெப்ரவரியில் நடைபெறவுள்ளது.