இலங்கைக்கான ஆயுதவிற்பனையை நிறுத்த தொடரும் தமிழ் இளையோரின் எம்.பி. க்களுடனான சந்திப்பு
இலங்கைக்கான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புலம்பெயர் தமிழ் இளையோர் 06.10.2018 அன்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் CHARLES WALKER ஐ சந்தித்து பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஒருங்கிணைப்பாளர் கோகுலகிருஷ்ணன் நாராயணசாமி தலைமையில் செயற்பாட்டாளர்களான அகிலன் தங்கவேலாயுதம், மதனகுமார் அழகையா, சிவலிங்கம் சுந்தரராஜ், மயூரன் சதானந்தன், இளையதம்பி கலைவாணன், சுந்தரலிங்கம் கணேசலிங்கம் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் அஷந்தன் தியாகராஜா ஆகிய குழுவினரே மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
குறித்த சந்திப்பின் போது பிரித்தானியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யும் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக எவ்வாறான இன அழிப்பை செய்து வருகின்றது என்பது தொடர்பில் குழுவினரால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
அதேவேளை, இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை விற்பனை செய்வதை பிரித்தானியா நிறுத்த பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறும் குறித்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் முன்பிரேரணை கொண்டுவரும் பட்சத்தில் அதற்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு தான் அறியப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் CHARLES WALKER, குழுவினருக்கு பதிலளித்தார்.
அது மட்டுமல்லாது குழுவினர் கோரியதின்படி எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது பிரித்தானியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யும் இலங்கை அதனை எந்தவகையில் பயன்படுத்துகிறார்கள் என்பது தொடர்பில் ஆய்வுகள் செய்யப்படுகின்றனவா? என கேள்வி ஒன்றை எழுப்புவதாகவும் உறுதியளித்துள்ளார்.