அதிநவீன ஏவுகணையைப் பரிசோதித்தது பாகிஸ்தான்!
அணு ஆயுதங்களுடன் இலக்கைச் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை (திங்கட்கிழமை) வெற்றிகரமாக பரிசோதித்ததாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் அதிநவீன கவுரி ஏவுகணையையே இன்று வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இன்றைய ஏவுகணைப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் பாராட்டு தெரிவித்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் அயல் நாடான பாகிஸ்தான் தனது ஆயுத பலத்தை அதிகரிப்பதில் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
உள்நாட்டுத் தயாரிப்பான பயங்கர போர் ஆயுதங்களுடன் சுமார் 700 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் ‘பாபர்’ ஏவுகணையை கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பரிசோதித்திருந்தது.
இதேவேளை இந்தியா அண்மையில் அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணையினை வெற்றிகரமாக பரிசோதித்திருந்தது.
பிருத்வி – 2 ஏவுகணை, அணுகுண்டு உள்ளிட்ட 1,000 கிலோ ஆயுதங்களைச் சுமந்து சென்று, 350 கி.மீ தூரமுள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது