சபரிமலை விவகாரத்தில் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி!
சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், மாநிலத்தில் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிகள் நடப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள இடதுசாரிக் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது.
பல்வேறு மத நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும், வழிபாட்டு தலங்களையும் பாதுகாப்பதில் கேரள அரசு உறுதியாக இருக்கின்றது.
சமீபத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சவால்களை கேரள மக்கள் ஒற்றுமையுடன் எதிர்கொண்டனர். மக்களிடம் நிலவும் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசியல் நோக்கத்துடன் மாநிலத்தில் அமைதியைச் சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பணிவது என்ற கேள்விக்கே இடம் இல்லை.
முன்பு உச்சநீதிமன்றின் தீர்ப்பை வரவேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, அதன்பின்னர் அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது ஆச்சரியமாக உள்ளது. பாரதீய ஜனதா கட்சியும் இந்த பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகிறது” என முதலமைச்சர் பினராயி விஜயன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.