அறிவியலாளரின் புதிய கருத்தால் சர்ச்சை!
பிரபல ஐரோப்பிய ஆராய்ச்சி அமைப்பு ஒன்றில் விரிவுரையாற்றிய அறிவியலாளர் ஒருவர் இயற்பியலைக் கட்டி எழுப்பியது பெண்களல்ல, ஆண்கள் என கூறியுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொருத்தமான கல்வித்தகுதி இல்லாத நிலையிலும் நிபுணத்துவ பொறுப்புகள் வேண்டும் என நிர்ப்பந்திப்பதாகவும் அவர் இதன்போது பெண்கள்மீது குற்றம் சுமத்தியிலுள்ளார்.
இந்தநிலையில் அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Pisa பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Alessandro Strumia என்னும் அந்த அறிவியலாளர் ஜெனீவாவிலுள்ள CERN ஆய்வகத்தில் உயர் ஆற்றல் கொள்கை மற்றும் பாலினம் என்னும் தலைப்பின் கீழ் உரையாற்றியபோது இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
அவரது உரைக்கு இடையே காட்டப்பட்ட ஸ்லைடுகள், சார்ட்கள் மற்றும் வரைபடங்கள் என அனைத்துமே, இயற்பியல் துறையில் ஆண்கள் பாகுபாட்டுக்கு ஆளாகிறார்கள் என வலியுறுத்தும் வகையிலேயே அமைந்திருந்தன.
இயற்பியலை கண்டுபிடித்ததும் வளர்த்ததும் ஆண்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த கருத்துகளுக்கு பதிலளித்துள்ள CERN ஆய்வகம், உயர் ஆற்றல் கொள்கை மற்றும் பாலினம் என்னும் தலைப்பின் கீழ் உரையாற்ற அழைக்கப்பட்ட அறிவியலாளர் ஆற்றிய உரை மன வருத்தத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
தனிப்பட்ட விதத்தில் தாக்குதல்கள் மற்றும் அவமதித்தல் கூடாது என்னும் விதிமுறைகளின்படி அந்த உரையின்போது பயன்படுத்தப்பட்ட ஸ்லைடுகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்த ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.