தமிழ் அரசியல்வாதிகளுக்கே புனர்வாழ்வு தேவை!
தமிழ் மக்களுடைய அரசியலை விட்டு தூரவிலகி நின்று தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கே புனர்வாழ்வு தேவைப்படுகின்றது என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.
யாழில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தமிழ் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்புக் கொடுக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகின்றார்.
அவர்கள் யாரிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என நான் கேட்கின்றேன். இன ரீதியாக அழித்தவர்களிடத்தே அவர்களின் காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்கும் படி அவர் கேட்கிறாரா? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு இதுதானா?
எங்கள் அரசியல் என்பது விடுதலைக்கானது, உரிமைக்கானது. இத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று இந்த அரசாங்கத்திடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கூறுவதாக இருந்தால்.
அவர்கள் செய்த போராட்டங்களுக்கு சுமந்திரன் என்ன செய்யப்போகின்றார். இந்தப் போராட்டம் நடந்த காலத்திலே அவர் எங்கு இருந்தார்.
அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு அல்ல, அவர்களுக்கு நிபந்தனையற்ற விடுதலை வேண்டும். அந்த விடுதலை அரசியல் தீர்மானத்தின் ஊடாக மேற்கொண்டு அவர்களை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும்.
அடுத்து அவர்கள் கூறுகின்றார்கள் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என்று. இதில் யாருக்கு புனர்வாழ்வு தேவை.
தமிழ் மக்களுடைய அரசியலை விட்டுத் தூரவிலகி நின்று தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்குத் தான் புனர்வாழ்வு தேவைப்படுகின்றது.
தமிழ் மக்களுடைய அரசியலோடு ஒன்றித்து தமது வாழ்வை தியாகம் செய்பவர்கள் சுதந்திரமாக நடமாடவேண்டியவர்கள்.
எனவே இந்த புனர்வாழ்வு கேட்கும் அரசியல் வாதிகளுக்கு மக்கள் தேர்தல் மூலம் புனர்வாழ்வு கொடுப்பார்கள். அத்தகைய புனர்வாழ்வுக்கு இவர்கள் செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.