சம்பந்தனுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி!
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எதிர்வரும் 17ஆம் திகதி தீர்க்கமான முடிவு ஒன்றை தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனுக்கு உறுதியளித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்தில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, பிரதமர், நீதியமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோருடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுக்களில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் 10 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி,
“எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர், இது குறித்து பேச்சு நடத்தி தீர்வு ஒன்றை எட்டலாம்.” என்று உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை தொடர்பு கொண் சுமந்திரன், ஜனாதிபதியின் உறுதிமொழியை தெரிவித்து போராட்டத்தை கைவிடுமாறு கோரியுள்ளார்.