அடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன!
அடக்கி ஆளும் சிந்தனையே குடும்பங்களிலும் நாட்டிலும் பல பிரச்சினைகளை உருவாக்கி வந்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலாலயா இசை நடனப் பள்ளியின் வருடாந்த நவராத்திரித் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உரிமைகளும் கடமைகளும் ஒரு சல்லிக் காசின் இருபக்கங்கள். ஒன்றை மட்டும் நாம் வலியுறுத்தி மற்றதை மறந்து நடக்கும் போது குடும்பங்களில் பிரச்சினைகள் உண்டாகின்றன.
கணவன் மனைவிமாரிடையே உரிமைகளுடன் கடமைகளும் வலியுறுத்தப்பட்டால் அங்கு அன்பு நிலவும். அடக்கி ஆளும் சிந்தனை எழாது. அடக்கி ஆளும் சிந்தனையே குடும்பங்களிலும் நாட்டிலும் பிரச்சினைகளை உருவாக்கி வந்துள்ளன.
சிங்கள மக்களும் தமிழ் மக்களும் மக்கட் கூட்டங்கள் என்ற முறையில் ஆங்கிலேயரால் சம அந்தஸ்து கொடுத்து ஆளப்பட்டு வந்தார்கள்.
1919ம் ஆண்டில் உங்களுக்கு தன்னாட்சி தரப்போகின்றோம் என்று ஆங்கிலேயர்கள் அறிவித்த உடனேயே சம அந்தஸ்தில் அது காறும் வாழ்ந்து வந்த இரு இனங்களிடையே முரண்பாடுகள் தலை தூக்கின.
நாம் பெரும்பான்மையினர் எமது வழிப்படியே எமது எதிர்பார்ப்பின் படியே சிறுபான்மையினர் நடக்க வேண்டும் என்ற எண்ணம் சிங்கள அரசியல் தலைவர்கள் மனதில் வேரூன்றியது.
இதனால் அடக்கி ஆளும் சிந்தனை சிங்கள மக்களிடையே மேலெழுந்தது. மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்தல், சிங்களம் மட்டும் சட்டம், வடகிழக்கு மாகாண வன்குடியேற்றங்கள், மேற்படிப்புப் பரீட்சைகளில் சமநிலைப்படுதல் போன்ற காரியங்கள் பெரும்பான்மையினத்தின் வன்சிந்தனைகளையும் அடக்கியாள முற்பட்ட அவலத்தையும் வெளிக்கொண்டுவந்தன.
அவர்களின் அடக்கி ஆள நினைத்த சிந்தனையே இன்றும் தமிழர்களுக்கு சமநிலை அளிக்கப் பின்னிற்பதன் காரணமாகும்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.