அரசாங்கம் மக்கள் மீது கடன் சுமையை திணிக்கின்றது!
நாட்டு மக்கள் மீது நல்லாட்சி அரசாங்கம் அளவுக்கு அதிகமாக கடன் சுமையைத் திணித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
கொத்மலை மேத்தகம பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளூர் உற்பத்திகளை அபிருத்தி செய்யாது வரியையும், தண்டப்பணத்தையும் இந்த அரசாங்கம் மக்களுக்குத் திணிக்கின்றது.
நாட்டில் அமெரிக்க டொலரின் ஊடாக செய்யப்படும் செலவீனத்தை குறைக்க வேண்டுமென தெரிவிக்கும் நாட்டு தலைவர்கள் மாறி மாறி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு உறவினர்களையும், நண்பர்களையும் கூடவே அழைத்து செல்வதற்கு ரூபாவின் செலவைவிட டொலரின் செலவினத்தையே மேற்கொள்கின்றனர்.
அண்மையில் நியூயோர்க்கில் சர்வதேச தலைவர்களின் மாநாட்டுக்கு நாட்டின் ஜனாதிபதிக்கே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாட்டின் தலைவர்கள் என்ற வகையில் இவர் அங்கு சென்றதில் தவறில்லை.
ஆனால் கூடவே குடும்பத்தாரையும், நண்பர்களையும் அதிகாரிகளையுமாக 62 பேரை அழைத்து சென்றதை நாம் குறை கூறுகின்றோம்.
காரணம் நம் நாட்டுக்கு பொதுமக்களின் வரி மற்றும் தண்டப்பணங்களை உயர்த்தி அதன் மூலமான பணம் இந்த பயணத்திற்கு செலவு செய்யப்பட்டுகின்றது. நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மாறி மாறி வெளிநாட்டு பயணங்களை உல்லாச பயணங்களாக மேற்கொள்கின்றனர். இதற்கு மக்களின் பணமே வீண்விரயோகம் செய்யப்படுகின்றது.
மாறி மாறி ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை மாற்றி புதிய ஆட்சியாளர்களுக்கு இடங்கொடுக்க வேண்டும் என்பதில் மக்கள் மாற்றம் பெற்று வருகின்றனர். நாட்டின் பாரத்தை ஏற்று கொள்ள மக்கள் விடுதலை முன்னணி தயாராகி வருகின்றது.
இதற்கு மக்கள் ஆணை பலமாக அமைய வேண்டும். அதற்கு முன் நாட்டின் இன்றைய நிலை மக்களுக்கு தெளிவுபட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.