இனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை: பறக்கும் ஆடை வந்துவிட்டது!
கார்கள், பைக்குகளை மறந்து விடுங்கள் அவற்றால் செல்ல முடியாத இடத்திற்கு இனி நீங்கள் போய் வரலாம்.
அயர்ன் மேன் வடிவத்தில் தயாரிக்கப்பட்ட ஜெட் இயந்திரம் பொருத்தப்பட்ட ஆடையொன்று தற்போது பரிசோதனை கட்டத்தில் உள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ரிச்சட் ப்ரௌனிங் தனது ஜெட் இயந்திரம் பொருத்தபட்ட ஆடையை கொண்டு சுமார் 10 தொடக்கம் 15 அடிகள் மேலுயர்ந்து பறந்து காட்டியுள்ளார்.
இந்த இயந்திரம் முழுமை பெறும் பட்சத்தில் ஆண் பெண் என்று இருபாலாரும் நீரின் மேலே பறந்து வித்தியாசமான போட்டிக்களத்தை உருவாக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
“இது வான்வழிப் பந்தயம் சார்ந்த ஒரு போட்டியாக இருக்கும், முப்பரிமாண கட்டமைப்பையும், 1000 குதிரை வலு கொண்ட ஜெட் இயந்திரங்களும் இந்த கனமான ஆடையுடன் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த தயாரிப்பு உண்மையில் அதிர்ச்சியூட்டும், தனித்துவமான படைப்பாக இருக்கும்” என்று படைப்பாளர் ரிச்சட் குறிப்பிட்டார்.
முன்னாள் விமானத் தளமாக இருந்த இடத்தில் அவரது நிறுவனம் செயற்பட்டு வருகின்ற நிலையில், எதிர்கால ஜெட் ஆடை விமானிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பயிற்சியளிக்கும் கூடமாகவும அது செயற்படுகின்றது.
இந்த ஆடை ஜெட் இயந்திரம் மணிக்கு 51 கிலோமீற்றர் வரை பயணிக்கக் கூடியது. அதில் ஐந்து மிகச் சிறிய அளவிலான ஜெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
விமானியின் கைகள் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்கள் உந்துசக்தியை பிரயோகித்து ஆடையை அணிந்திருக்கும் நபரை மேலெழுந்து பறக்கச் செய்கின்றன.
தனது ஜெட் ஆடை இயந்திரம் தற்போது பரிசோதனை கட்டத்திலேயே இருப்பதாக தெரிவித்துள்ள ரிச்சர்ட், இந்த இயந்திரம் முழுமை பெறும் பட்சத்தில் வர்த்தக ரீதியாக தனது தயாரிப்புகளை மேற்கொள்ள முடியும் என்று நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
அத்துடன் இதனை 3 லட்சம் பவுண்களுக்கு விற்பனை செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.