புலிகளை விடுதலை செய்ய வேண்டுமென கூட்டமைப்பு அச்சுறுத்தல்!
சிறைகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை அச்சுறுத்தி வருவதாக பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதை குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்துவதற்கே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தவறான காரணங்களுக்காவும் சர்வதேசம் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்காகவுமே புதிய அரசமைப்பை அரசாங்கம் கொண்டு வருவதற்கு எத்தனிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசமைப்பு நீடித்தால் நாட்டில் மீண்டும் யுத்தமொன்று ஏற்படுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
இப்படி சம்பந்தனின் அச்சுறுத்தலுக்குப் பயந்து புதிய அரசமைப்பு கொண்டுவரப்படுமானால் அது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமென்றும் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.