கனடாவில் இன்றுமுதல் சட்டபூர்வமாகிறது கஞ்சா!
போதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் தற்போது கனடா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
மீள் உருவாக்கத்தை மேற்கொள்ளக் கூடிய கஞ்சா (cannabis) போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கக் கோரி கடந்த சில மாதங்களாக கனடாவின் பல மாகாணங்கள், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளன.
இந்நிலையில், அண்மையில் கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோவினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்க, இன்று முதல் (புதன்கிழமை) நாடு முழுவதும் கஞ்சா போதைப் பொருள் அரசாங்கத்தின் அனுமதியுடன் கொள்வனவு, விற்பனை செய்யக்கூடியதாகயிருக்கும்.
இதுவரை கறுப்புச் சந்தையில் சட்டவிரோதமாக விற்கப்பட்டுவந்த போதைப் பொருட்களை அரசாங்கத்தின் கண்காணிப்புக்குள் அதன் அனுமதியுடன் விற்பனை மற்றும் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியதாக இருப்பதினால், இதன் மூலம் அரசாங்கம் பாரிய இலாபத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகயிருக்கும் என நிர்வாகப் பிரிவினர் எதிர்பார்க்கின்றனர்.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு போதைப் பொருட்தடை உத்தரவிற்குப் பின்னர், கனடா அரசாங்கமே நாடு முழுவதும் 109 அனுமதிக்கப்பட்ட கஞ்சா விற்பனை நிலையங்களை நிறுவ அனுமதி வழங்கியுள்ளது.
போதைப் பொருட்களை சட்டபூர்வமாக அனுமதித்த முதல் நாடு உருகுவே ஆகும். இது கடந்த ஆண்டு குறித்த உத்தரவை அமுல்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.