டெங்கு காய்ச்சலை மருத்துவமனைகள் மூடி மறைக்கின்றன!
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரச மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு, டெங்கு காய்ச்சல் என சான்றிதழ் தர அரசு மறுத்து வருவதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கொளத்தூர் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை), பல்வேறு பணிகளை தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் மேற்படி கூறியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் ஒப்புக்கொண்ட போதிலும், அரச மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் என சான்றிதழ் வழங்க மறுக்கப்படுவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை உறுதிப்படுத்த அரச மருத்துவமனைகள் மறுத்து வருகின்றன. இதனால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் பல்வேறு உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கு உதாரணமாக தனது தொகுதியில் சிறுவனொருவன் உயிரிழந்திருப்பது தகுந்த சாட்சி என்றும் கூறியுள்ளார்.