தேர்தலில் போட்டியிடப்போவதில்லை – வைகோ திடீர் அறிவிப்பு

1aa
” என்னை முன்வைத்து சாதி மோதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை” என அதிரடியாக அறிவித்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. இதனால் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

கோவில்பட்டியில் ம.தி.மு.க சார்பில் விநாயகர் ரமேஷ் என்பவர் இன்று மனுத்தாக்கல் செய்தார். வைகோவுக்கு மாற்று வேட்பாளரான அவர் மனுத்தாக்கல் செய்ததது ம.தி.மு.க தொண்டர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. அவர் வேட்புமனுத் தாக்கல் செய்த சில நிமிடங்களில் பேசிய வைகோ, “கோவில்பட்டியில் என்னை முன்வைத்து சாதி மோதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். எனவே, இந்தத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை” என அறிவித்தார்.

வைகோவின் இந்த முடிவைப் பற்றி நம்மிடம் பேசிய ம.தி.மு.க நிர்வாகி ஒருவர், ” நேற்று கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட வடக்கு திட்டங்குளத்தில் பிரசாரத்தைத் தொடங்க இருந்தார் வைகோ. அதற்கு முன் அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார். இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து, ‘வைகோவே வெளியேறு’ எனக் கோஷமிட்டார்கள். இதனால் கடுப்பான தலைவர், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பசும்பொன்னுக்குச் சென்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிறேன். சிதம்பரபுரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனுக்கு நானும், எனது சகோதரரும் இணைந்து சிலை வைத்துள்ளோம். தேவர் சமூகத்தினர் பலர் காவல் துறையினரால் பாதிக்கப்பட்டபோது நான் அவர்களுக்காகப் போராடியுள்ளேன். ‘இந்தத் தொகுதியில் தேவர் சமூகத்து வாக்குகள் அதிகமாக உள்ளது எனக் கூறி தி.மு.க வேட்பாளர் சுப்ரமணியம் பிரசாரம் செய்கிறார். இது கண்டனத்திற்குரியது. தேவர், நாயுடு மக்களுக்கு இடையே சாதி மோதலை உருவாக்க முயற்சி நடக்கிறது. நான் எதற்கும் பயப்பட மாட்டேன். என்னை இந்த உலகத்தில் மிரட்டி பணியவைக்க முடியாது’ என ஆவேசப்பட்டார்.

எல்லாவற்றையும் மீறி தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதையடுத்து அந்தப் பகுதியில் கூடியிருந்த சிலர் ரகளையில் ஈடுபட, போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர். இதன்பின்னர், இமானுவேல் சேகரன் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார். அங்கும் பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியினை அகற்றவும் சிலர் முயன்றனர். இந்த சம்பவம் வைகோ மனதில் மிகப் பெரிய காயத்தை ஏற்படுத்திவிட்டது. வைகோவை எந்த வகையிலேனும் தேர்தல் போட்டியில் பின் வாங்கச் செய்ய வேண்டும் என்ற தி.மு.கவின் நோக்கம் இதன்மூலம் நிறைவேறிவிட்டது. தலைவரின் முடிவு வேதனை அளிக்கிறது!” என்றார்.

ஆனால், கோவில்பட்டியைச் சேர்ந்த அரசியல் கட்சிப் பிரமுகர் ஒருவரின் கருத்து வேறு மாதிரியாக உள்ளது.

அவர் நம்மிடம், ” நாடாளுமன்றத் தேர்தலில் கோவில்பட்டியில் 25 சதவீத அளவுக்கு ம.தி.மு.க வாக்குகளை வாங்கியது. ஆனால், இந்தமுறை அ.தி.மு.கவின் கடம்பூர் ராஜூவும் வைகோவும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தி.மு.க சார்பில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் போட்டியிடுகிறார். இதனால் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு பின்னடைவே ஏற்படும். இந்த சாதி விவகாரத்தை முன்வைத்தே வைகோவுக்கு எதிராக சிலர் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். நேற்று நடந்த கலவரம் ஒரு தொடக்கம்தான். தேர்தல் முடிவில் வைகோ மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட வேண்டும் என்பதே தி.மு.கவின் அதிரடித் திட்டம். தனக்கு எதிராக மிகப் பெரிய வேலைகள் நடப்பதை உணர்ந்துதான் போட்டியிடும் முடிவில் இருந்து பின்வாங்கினார் வைகோ” என்றார் அவர்.

இதுகுறித்து, சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, ” அவர் எடுத்த முடிவு பற்றி இப்போதுதான் கேள்விப்பட்டேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. அவரிடம் பேசிவிட்டு லைனில் வருகிறேன்” என்றார்.
விகடன்

Copyright © 1155 Mukadu · All rights reserved · designed by Speed IT net