அரசியல் கைதிகள் எல்லோரையும் விடுவிக்கவேண்டும்!
அரசியல் கைதிகள் எல்லோரையும் விடுவிக்கவேண்டும். இந்த விவகாரத்தில் வேறு விடயங்கள் கலக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அழுத்திக் கூறியுள்ளார்.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பேச்சு இடம்பெற்றது.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்,
அரசியல் கைதிகள் எல்லோரையும் விடுவிக்கவேண்டும். இந்த விடயத்தில் வேறு விவகாரங்களைக் கலக்கக் கூடாது என்று கோரியுள்ளார். அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சந்திப்பின்போது எல்லோரையும் விடுவிக்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கூறியிருந்தார். அவர் எல்லோரையும் என்று அர்த்தப்படுத்தியது, தமிழ் அரசியல் கைதிகளையும், இராணுவத்தினரையுமா என்பது தொடர்பில் அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையிலேயே, அரசியல் கைதிகள் விடயத்தில் வேறு விடயங்களைப் போட்டுக் குழப்பக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.
மேலும், ஜனாதிபதியுடனான பேச்சுத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு நேற்று மாலை அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.